Friday, December 27, 2019

1. முதற்பகவன் வழுத்து

1. முதற்பகவன் வழுத்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)


நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன. அது போல உலகம் முற்பகவனை முதலாக உடையது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)


தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழதவராயின் நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)


அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைத்தமட்டில் விரைந்து சென்று அமரும் இறைவனின் மாட்சியமைப்பட்ட அடிகளை அடைந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)


விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் அடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் எக்காலத்தும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)


இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)


மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர் வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)


ஒரு வகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்க்கு அல்லாமல் மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8)


அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனும் ஆகிய இறைவனது திருவடியாகிய பனையைச் சேர்ந்தார்க்கல்லது அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின் இன்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)


எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் தத்தம் பலன்களைக் கொள்ளாத பொறிகளைப் போலப் பயன்படாதன வாகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)


இறைவன் திருவடிçயாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். அப் புணையைச் சேராதவர் அக் கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

2. வான் சிறப்பு

2. வான் சிறப்பு

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)


மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால், அம்மழை உலகிற்குச் சாவா மருந்து என்று கருதபெறுந் தன்மையது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)


உண்பார்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாவது மழையே.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்(து)
உண்ணின் றுடற்றும் பசி. (13)


வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின் பரந்த கடலாற் சூழற்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண் பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)


மழை என்னும் வருவாய் வரவற்றுவிடின் உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)


பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும் அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப் பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கி விடுவதும் ஆகிய எல்லாம் செய்வது மழையே.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது. (16)


வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றிப் பின் அப்பொழுதே பசும்புல் நுனி யையும் காண்பது அரிதாகும்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின். (17)


பெருங்கடலும் தன் இயல்பு குறையும் முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்பு தான் அதன்கண் பெய்யாது விடின்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)


மழை பெய்யாவிடின் இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டை விழாவும் நடைபெறா.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (19)


மழை பெய்யா விடின் இப் பரந்த உலகின் கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு. (20)


எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்றி உலக வாழ்வு நடவாதாயின் அந்நீர் இடையறாது ஒழுகும் மழையின்றி நிகழாது.

3. நீத்தார் பெருமை

3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. (21)


நூல்களது துணிவு, தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையைச் சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)


இருவகைப் பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினது என்று அளவிட்டுக் கூறப்புகின் அது, இவ்வுலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவரை யயல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.

இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)


பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்தறிந்து பிறபபறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரயன்னும் வைப்பிற்கோர் வித்து. (24)


அறிவு என்னும் துறட்டியினால், பொறிகளாகிய யானைகள் ஜந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன், எல்லா நிலங்களும் மேலான வீட்டு நிலத்திற்குப போய் முளைத்தற்குரிய ஒரு விளைந்த மணிவிதை போலாவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. (25)


ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்க்கு அரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சானனறாளனாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)


உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். பிறர் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

சுவையயாளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (27)


சுவை,ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூத மூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)


பயன் நிறைந்த சொற்களுடைய துறவியரின் பெருமையை நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டி விடும்.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. (29)


நற்குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடி ஏறி நின்ற முனிவரின் கடுஞ் சினத்தை, சினக்கப்பட்டரால் நொடி நேர மேனுந் தடுத்தல் முடியாது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)


எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் துறவியரே.

4. அறன் வலியுறுத்தல்

4. அறன் வலியுறுத்தல்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு? (31)


மறுமையில் விண்ணுலக இன்பத்தையும் வீடுபேற்றையும் தரும். இம்மையில் செல்வத்தையும் தரும். ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தை விடச் சிறந்த ஆக்கம் எதுதான்?

அறத்தினூஉங் ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)


ஒருவருக்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்க வழியும் இல்லை. அதை மறந்து செய்யாது விடுவதிலும் பெரிய கெடுதல் வழியும் இல்லை.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)


அறமாகிய நல்வினையைத் தத்தமக்கு இயன்றவாறு அது நடைபெறக் கூடிய வழியயல்லாம் இடைவிடாது செய்க.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)


ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனாய் இருத்தலாகிய அவ்வளவே அறமாவது. மற்றப் பூச்சும் ஆடையும் அணியும் ஆகிய கோலங்கள் எல்லாம் வீண் ஆரவாரத் தன்மையன.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். (35)


பிறராக்கம் பொறாமையும் அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும் அதைப் பெறாவிடத்து எழும் சினமும் அது பற்றிவருங் கடுஞ்சொல்லும் ஆகிய இந்நான்கை யும் விலக்கி நடந்தே அறமாவது.

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)


யாம் இன்று இளமையாய் இருப்பதாற் பிந்தி முதுமையிற செய்வேம் என்று கடத்தி வையாது இன்றிருந்தே அறவினையைச செய்து வருக. பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. (37)


அறத்தின் பயன் இதுவென்று உரை அளவையால் ஒருவர்அறிவிக்க வேண்டிய தில்லை. பல்லக்கைச்சுமப்பானேடு அதில் ஏறிச்செல்வான் இடைப்பட்ட காட்சி அளவையாலேயே அது அறியப்படும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)


செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாதவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்து வருவானாயின் அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல. (39)


அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது. வேறு தீய வழியில் வருவன எல்லாம் இன்பம் போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே. அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

செயற்பால தோரும் அறனே ஒருவற்(கு)
உயற்பால தோரும் பழி. (40)


ஒருவன் என்றும் செய்யத்தக்கது நல்வினையே. செய்யாது விடத்தக்கது தீவினையே.

5. இல்வாழ்க்கை

5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (41)


இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன், இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)


உலகப் பற்றைத் துறந்தவர்க்கும், உண்பதற்கு இல்லா வறியர்க்கும், ஒருவரும் இன்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும் இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன் துணையாம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்னென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை. (43)


இறந்த முன்னோர், வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழையுறவினர், தன் குடும்பம் என்று சொல்லப்படும் அவ்வைந்திடத்தும் செய்ய வேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல் இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாகும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியயஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)


ஒருவனது இல்லற வாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின், அவனது மரபு வழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது. (45)


ஒருவனது இல்லற வாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவும் ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்? (46)


ஒருவன் இல்லற வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய துறவு நெறியற் போய்ப பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப பெறும் பயன் யாது?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை. (47)


முறைப்படி இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையனவனாம்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)


தவஞ் செய்பவரைத் தவநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன அறத்தினின்று தவறாத, இல்வாழ்க்கை அத் தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை உடையது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)


இருவகை அறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூற்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே. அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மை உடைத்தாயின் மிக நன்றாம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)


இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

6. வாழ்க்கைத் துணை நலம்

6. வாழ்க்கைத் துணை நலம்

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)


இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய், தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்த் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள் அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)


இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவிடத்திடத்தில் இல்லாவிடின் அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)


ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்பு உடையவளானால் அவனுக்கு இல்லாதது எது? அம் மனைவி அச்சிறப்பு இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?

பெண்ணிற் பெறுந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (54)


ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யயனப் பெய்யும் மழை. (55)


தான் மணக்கும் முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது தன் கணவன் பாதங்களையே வைகறை யிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய்யயன்று சொன்னவுடன் மழை பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)


தன் கற்பையும் உடல்நலத்தையும் காத்து, தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி, தம்இருவரையும் பற்றிய தகுதி வாய்ந்த உலக மதிப்பையும் காத்து, பிறர்க்குச் செய்யும் அறவினை களிலும் தளர்ச்சியில்லாதவள் இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)


பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்து வைத்தாற் போற் காக்குங் காவல் என்ன பயன்படும்? அப் பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)


பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப பெறுவாராயின் தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச் செய்ய பெறுவர்.

புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. (59)


தனக்கும் தன கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவி இல்லாதார்க்கு, தம்மைப பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)


மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கல மாவது. நல்ல அறிவுடை மக்கட் பேறு அதற்கு அணிகலமாவது என்று கூறுவர் அறிந்தோர்.

7. மக்கட் பேறு

7. மக்கட் பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. (61)


இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக் கூடிய பிள்ளைப்பேறு அல்லாத வேறு சிறந்தவற்றை யாம் அறிந்த தில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். (62)


பழி தோன்றாத நற்குணங்களை உடைய மக்களைப் பெறின் பெற்றோரை எழுபிறவி அளவும் துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)


தம் மக்களைத் தம் செல்வம் என்று பாராட்டுவர் பெற்றோர், அம்மக்களின் மகச் செல்வம் அவரவர் வினைக்கேற்றவாறு வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)


தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப்பட்ட சோறு. பெற்றோருக்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவர் உணவினும் மிக இனிமை யானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (65)


பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம். அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)


தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர் புல்லாங் குழலிசை இனிது என்றும் செங்கோட்டியாழிசை இனிது என்றுங் கூறுவர்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)


தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றோர் அவையின்கண் முதன்மையாய் இருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமான் ஆக்குதல்.

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)


தம்மினும் மிகுதியாக, தம் மக்கள் கல்வியறியுடையராய் இருத்தல் பெற்றோராகிய தமக்கு மட்டுமின்றி இம்மண்ணுலகத்து உள்ள மற்றெல்லா மக்கட்கும்இன்பந தருவதாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)


தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோன் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய், தான அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)


தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி , மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறு அளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம் மாறாவாது, தன்அறிவாற்றலையும் நற்குண நற்செயல் களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ் சொல்லை அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.

8. அன்புடைமை

8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (71)


ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்ட விடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவர் உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாரும் அறியப் பறை சாற்றி விடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)


அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர். அன்புடையாரோ பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமின்றித் தற் கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. (73)


பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்பொடு பொருந்திய தொடர்பை அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடை யோர்.

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)


உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும். அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும்.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. (75)


இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை, அவர் முன்பு இங்கு அன்போடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)


அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர். அவர் அறியார். அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம். (77)


அறத் தெய்வம் அன்பில்லாத உயிரை, எலும்பில்லாத உடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)


உள்ளத்தில் அன்பில்லாத உயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல், பாலை நிலத்தின்கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)


இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, மற்றப் புறத்து நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)


அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச சொல்லப் பெறுவது. அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

9. விருந்தோம்பல்

9. விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)


கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம் விருந் தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)


உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே எனினும், விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்து உண்டல் விரும்பத் தக்கதன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)


நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல் வாழ்க்கை வறுமையால் துன்புற்றுக் கெடுதல இல்லை.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (84)


முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின் கண் திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம். (85)


முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தான் உண்ணும் வேளாளனது நிலத்திற்கு விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)


தன்னிடம் முந்தி வந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தின ரையும் எதிர்பார்த்து அவரோடு தான் உண்ணக் காத்திருப் பான், மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக் கொள்ளப் படுவான்.

னைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)


விருந்தினர்க்கு உணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று. விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)


விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற் கொள் ளாதார், அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலை யானது என்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால் இன்று எமக்கு யாதொரு பற்றுக் கோடும் இல்லை என்று நொந்து கூறா நிற்பர்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)


செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை. அது பேதையரிடத்திலேயே உள்ளது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)


இயல்பாக மென்மையவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப் படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும். ஆனால் தன்மானம் உள்ள விருந் தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர்.

10. இனியவை கூறல்

10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)


இனிய செல்லாவன அன்பு கலந்து வஞ்சனை இல்லாத மெய்ப் பொருளை அறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின். (92)


ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ந்து இனியசொல்லும் உடையனாகப் பெறின், அது மனம் உவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)


ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி, பின்பு நெருங்கியவிடத்து அகமலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை உடையதே அறமாவது.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)


யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்குத் துன்புறுத்தும் வறுமை இலதாகும்.

பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்(கு)
அணியல்ல மற்றுப் பிற. (95)


ஒருவனுக்கு அணியாவன அடக்கம் உடைமையும் இன்சொல் உடமையுமாம். மற்றப் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)


விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து, அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானாயின் அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும்.

நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)


விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல், இம்மைக்கு நேர்பாட்டை (நீதியை) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும். (98)


விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)


பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்து அறிகின்றவன் தான் மட்டும் பிறரிடத்தில் வன்சொல்லை ஆள்வது என்ன பயன் கருதியோ!

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)


தனக்கு அறமும் பிறர்க்கு இன்பமும் பயக்கும் இனிய சொற்களும் எளிதாய் வழங்குமாறு தன்னிடத்தில் இருக்கவும், அவற்றை வழங்காது தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்களை ஒருவன் வழங்குதல் இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவு மான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக இருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றைப் பறித்து உண்டல் ஒக்கும்.

11. செய்ந்நன்றி யறிதல்


11. செய்ந்நன்றி யறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)


தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருக்கும் ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவை ஈடு செய்தல் அரிது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)


ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த உதவி பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாய் இருந்தாலும், அக்கால நிலை நோக்க நிலவு லகத்திலும் பெரிதாம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (103)


இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்று ஆராயாது ஒருவர் செய்த உதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின் அதன் நன்மை கடலினும் பெரிய தாம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)


தினை அளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானா யினும் அதன் பயனை அறிந்தவர் அதைப் பனை அளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)


கைமாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகை யானும் முன் செய்த உதவி அளவினதன்று. அதனைச் செய் வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)


துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. (107)


தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவு உடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று. (108)


ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று. அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும். (109)


தமக்கு முன்பு ஒருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற பெருந் தீமைகளைச் செய்தாராயினும் அவையயல்லாம் அவர் செய்த நன்மை யயான் றையே நினைத்த மட்டில் நன்றியறிவு உடையார் மனத்தில் இல்லாமல் மறைந்து போம்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)


எத்துணைப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத் தீவினைகள் நீங்கும் கழுவாய் (பிராயச் சித்தம்) உண்டாம். ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்த வனுக்கோ தப்பும் வழியே இல்லை.

12. நடுவு நிலைமை

12. நடுவு நிலைமை

தகுதி யயனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின். (111)


பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப்பெறின் நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம்.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து. (112)


நடுவுநிலைமை உடையவனது செல்வம், பிறர் செல்வம் போல் அழியாது வழியினர்க்கும் வலிமையாதலை உடையது. (வலிமை பாதுகாப்பு)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (113)


அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும் நடுவுநிலை திறம்பு வதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். (114)


இவர் நேர்மையுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உணமை அவரவருடைய மக்களால் அறியப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)


பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால், அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாதவை அல்ல. ஆதலால் இவ் வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை, அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (116)


ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருது மாயின் அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு, ‘நான் இனிக் கேடடைவேன்’ என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் அடங்கியான் தாழ்வு. (117)


நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை உயர்ந்தோர் கேடாகக் கருதார்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)


இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரை யறுத்துக் காட்டும் துலாக்கோல் போல மனத்திற் சம நிலையாக இருந்து ஒரு பக்கஞ் சாயாது உண்மை உரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (119)


நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம். அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டம் இன்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின். (120)


பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின் வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

Thursday, December 26, 2019

13. அடக்க முடைமை

13. அடக்க முடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)


அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகததிற்கு கொண்டு போய்ச் சேர்க்கும். அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கு அரிய இருள் உலகத்திற்குச் செலுத்திவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு. (122)


அடக்கமுடைமையை ஒரு செல்வமாகப் பேணிக் காக்க; மக்கட்கு அதனினுஞ் சிறந்து ஆக்கந் தருவது வேறொன்றும் இல்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)


ஒருவன் அறியத் தக்க நூல்களை அறிந்து இல்லறத்தின்கண் அடங்கி ஒழுகுவா னாயின், அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த தன்மையை விளைவிக்கும்.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)


இல்லறத்தின்கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலை உயர்ச்சி யினும் மிகப் பெரிது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125)


செருக்கின்றி அடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம். ஆயினும் அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)


ஆமையானது, தனக்குத் தீங்கு நேராதவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலும் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின் அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)


மக்கள் வேறு எவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க. அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (128)


ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றே னும் பிறர்க்கு உண்டாயின், அவன் ஏற்கனவே செய்துள்ள பிற அறங்கள் பயன்படா மற்போம்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)


ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண், காட்சிப் பொருளாகிய உடம்மையே சுட்டதினால் அப்பொழுதேயோ அப்புண் ஆறின. பின்போ உள்ளத்தில் ஆறிவிடும். ஆயின் நாவினாற் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)


அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யயாழுக வல்லவனின் செவ்விய மனநிலையை, அறத்தெய்வம் அவனைத் தலைக் கூடுமாறு அவனை யடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும்.

14. ஒழுக்கமுடைமை

14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)


ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருதலால், அவ்வொழுக்கம் உயிரினும் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)


ஒழுக்கத்தை எவ்வகையிலும் கெடாதவாறு வருந்தியும் பேணிக்காக்க. பலவகை அறங்களையும் ஆராய்ந்து அவற்றுள் இருமைக்கும் துணை யாவதை எவ்வளவு கவனமாகத் தேர்ந்தாலும், அவ்வொழுக்கமே துணை யாக முடியும். (ஏகாம் பிரிநிலை).

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)


நல்லொழுக்கம் உடைமையே உயர்குலத் தன்மையாம். தீயயாழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)


ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும். ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (135)


பொறாமை உள்ளவனிடத்திற் செல்வம் இல்லாதது போல, ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்வு இல்லை. (உயர்வு உயர்குலத்தானாதல்)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)


ஒழுக்கக் கேட்டால் தமக்குக் குல இழிபாகிய கேடு உண்டாவதை அறிந்து, அறிவுடை யோர் ஒழுக்கத்தில் தளரார்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)


ஒழுக்கத்தினால் எல்லாரும் உயர்வடைவர்; அவ்வொழுக்கத்தினின்று தவறு தலால் தமக்கு உரியதல்லாத பழியையும் அடைவர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயயாழுக்கம்
என்றும் இடும்பை தரும். (138)


ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந் தரும். தீயயாழுக்கம் எக்காலும் துன்பமே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)


மறந்தும் தீய சொற்களைத் தம் வாயாற் சொல்லும் சொலவுகள் ஒழுக்கமுடைய உயர்ந்தோர்க்கு இயலா.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)


உயர்ந்தோரோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்ற வரேனும் அறிவிலாதாரே.

15. பிறனில் விழையாமை

15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்(து)
அறம்பொருள் கண்டார்கண் இல். (141)


வேறொருவன் உடமையாக உள்ளவளைக் காதலித்தொழுகும் மடமை நில வுலகத்தில் அறநூலையும், பொருள்நூலையுங் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல். (142)


காமம் பற்றித் தீவினை செய்தார் எல்லாருள்ளும் பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண் போய் நின்றாரைப் போலப் பேதையார் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். (143)


தம்மை நல்லவர் என்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின்கண் தீவினை செய்தலை விரும்பி ஒழுகுவார் உறுதியாக இறந்தாரின் வேறுபட்டவரல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)


எத்துணை உயர்ந்தோராயினும் தாம் செய்யுந் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராது பிறன் மனைவியை விரும்பி அவன் இல்லத்திற்குட் புகுதல் என்ன பயனுடைத்தாம்?

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)


பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவன் தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன் குடிப்பழியையும் அடைவான்.

பகைபாவம் அச்சம் பழியயன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)


பிறன் மனைவியின் கண் நெறிகடந்து ஒழுகுபவனிடத்துப் பகையும் கரிசும் அச்சமும் பழியும் ஆகிய நாற்கேடுகளும் ஒருகாலும் நீங்காவாம். (கரிசு-பாவம்)

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)


அற இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன், பிறனுக்கு உரிமை பூண்டு அவன் வழி நிற்பவளின் பெண்டன்மையை விரும்பாதவனாவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. (148)


அறிவு நிறைந்தோர்க்கு, பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண் டகைமை அறம் மட்டுமோ, நிரம்பிய ஒழுக்கமுமாம்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோதோயா தார். (149)


அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின்கண் எல்லா நலங்களும் பெறுதற்கு உரியார் எவர் எனில் பிறன் ஒருவனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதார்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)


ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும் பிறனாட்சிக்கு உட்பட்டவளின் பெண் தன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம்.

16. பொறை யுடைமை

16. பொறை யுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போலத் தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152)


பொறை நன்று ஆதலால், பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க. இனி, அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)


ஒருவனுக்கு வறுமையுள் வறுமையானது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல். அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். (154)


ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின், அவனாற் பொறையுடைமை பேணிக்காத்து ஒழுகப்படும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)


பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார். ஆனால், அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக்கொள்வர்.

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)


தமக்குத்தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே. ஆனால் அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து)
அறனல்ல செய்யாமை நன்று. (157)


செய்யத் தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் அதனால் வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறன் அல்லாதவற்றைத் தான் அவர்க்குச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (158)


செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரைத் தாம் தம் பொறையினால் வென்று விடுக.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (159)


நெறிகடந்த கீழ்மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள் இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (160)


நோன்பினால் உணவைத் தவிர்த்துப் பசியையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே. ஆயின் அவர் பெரியவராவது பிறர்சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்த படியே.

17. அழுக்காறாமை

17. அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்றன் நெஞ்சத்(து)
அழுக்கா றிலாத இயல்பு. (161)


ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை இல்லாத தன்மையைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்க.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)


யாரிடத்தும் பொறாமையில்லாது ஒழுகுதலை ஒருவன் பெறுமாயின் அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை ஒப்பது வேறு ஒன்றும் இல்லை.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (163)


இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப்படுகின்றவன், பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவ னாவன்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து. (164)


அறிவுடையோர் பொறாமைகொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார், அத்தீய நெறியால் தமக்கு இருமையிலும் கேடு வருதலை அறிந்து.

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (165)


பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வது ஆதலின், பொறாமை உள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டியதில்லை.

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (166)


ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டுமின்றி, அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)


பிறர் ஆக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை, செங்கோலத்தினள் ஆகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டிவிட்டு நீங்கும்.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)


பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) தன்னை உடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து, மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)


பொறாமை மனத்தானது செல்வமும் பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும் எக்கரணியம் பற்றி நேர்ந்தன என்று ஆராயப்படும்.

அழுக்கற் றகன்றாரு இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (170)


பொறாமைப்பட்டுப் பெரியவர் ஆயினாரும் இல்லை; அக்குணம் இல்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாரும் இல்லை.

18.வெஃகாமை

18.வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிங்
குற்றமும் ஆங்கே தரும். (171)


பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமை இல்லாது அவரது நற்செல்வத்தின் மேல் ஒருவன் ஆசை வைப்பின் அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கு ஏதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)


நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர் பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)


பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத்தால் வருவதும் நிலையானதும் பேரளவினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடை யோர்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)


ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர் ‘யாம் பொருளி லேம்’ என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.

அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)


உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம், அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல் களைச் செய்வாராயின்?

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)


அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்து எண்ணிய மட்டிற் கெட்டு விடுவான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)


பிறர் பொருளைக் கவர்வதால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க; பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லையாதலின்.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)


ஒருவனது செல்வம் சுருங்காமல் இருத்தற்கு வழி எதுவெனின் அது பிறனுக்குத் தேவையான அவனது கைப்பொருளைத் தான் விரும்பாமையாம்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு. (179)


இது அறமென்று தெளிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடை யாரிடத்துத் திருமகள் தான் அடைதற்கான திறங்களை அறிந்து அவற்றின்படியே சென்றடை வாள்.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. (180)


பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின் அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; பிறன் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்.

19. புறங் கூறாமை

19. புறங் கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. (181)


ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும் ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப் படுதல் நன்றாம்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)


ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்ட விடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல், அறம் என்றே ஒன்றும் இல்லை என அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். (183)


ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்ட விடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும் அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல், அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (184)


ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் இன்றிக் கடுஞ்சொற்களைச் சொல்லினும் அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)


புறங்கூறுவான் ஒருவன் அறம் நல்லது என்று சொல்லினும் அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை, அவன் புறஞ்சொல் லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். (186)


பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன் தன் சொந்தப் பழி களுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப் படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)


மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர், பிளவு உண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்
என்கைகொல் ஏதிலார் மாட்டு. (188)


தம் நெருங்கிய உறவினர் குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பு டைய வன்னெஞ்சர், அயலார் செய்தியில் எத்தகையவராவார்!

அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. (189)


பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங்கூற்றா ளனது உடலைப் பொறுத்தலை, மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பிற்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)


புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம் போல் தம் குற்றத்தையும் காணவல்ல ராயின் நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ?

20. பயனில சொல்லாமை

20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191)


அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன் எல்லா ராலும் இழிவாய் எண்ணப்படுவான்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. (192)


ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல், விரும்பப் படாத செயல்களைத் தன் நண்பனிடத்துக் செய்தலினுந் தீயதாம்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (193)


ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே அவன் நேர்மை (நீதி) இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (194)


ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல், நேர்மையோடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (195)


இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல் வாராயின் அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கி விடும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யயனல். (196)


பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்களுட் பதர் என்று சொல்லுக.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (197)


அறிவுடையோர் நேர்மை இல்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாது இருத்தலே அவர்க்கு நன்றாம்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (198)


அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார் மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். (199)


மயக்கத்தினின்று நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)


ஏதேனும் ஒன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொற்களில் பயன் இல்லாதவற்றைச் சொல்லாதிருக்க.

21. தீவினை யச்சம்

21. தீவினை யச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு. (201)


தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்குத், தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)


ஒருவன் தனக்கு இன்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமை யிலும் துன்பங்களையே தருதலால் அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப் படத் தக்கனவாம்.

அறிவினுள் எல்லாம் தலையயன்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல். (203)


தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை அறிவுச் செயல்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயது என்பர் அறிவுடையோர்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)


ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க எவனே னும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)


எவனேனும் ‘யான் பொருள் இல்லாதவன்’ என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்வானாயின் மீண்டும் வறியவனாவான்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். (206)


துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்து தலை விரும்பாதவன் தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். (207)


எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்பு வர்; ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்ற இடமெல்லாஞ் சென்று வருத்தும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று. (208)


பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின், ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக் கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கிய தன்மையது.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)


ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின் பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியயாடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)


ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின் அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்துகொள்க.

22. ஒப்புர வறிதல்

22. ஒப்புர வறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு. (211)


உலகில் உள்ள உயிர்கள் தம் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரை உதவுகின்ற முகிலுக்கு என்ன கைம்மாறு செய்கின்றன! ஒன்றும் இல்லையே! ஆதலால், அம்முகில் போலும் வள்ளல்கள் செய்யும் ஒப்புரவு களும் கைம்மாறு வேண்டுவன அல்ல.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)


ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த செல்வம் முழுதும் தகுதி யுடையார்க்குப் பல்வகையிலும் உதவி செய்தற் பொருட்டேயாம்.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் அல்ல பிற. (213)


ஒப்புரவு போன்ற நல்ல செயல்களைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் அரிதேயாம்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)


ஒப்புரவு செய்வானும் செய்யாதானும் ஆகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன். மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)


உலகிலுள்ள உயிர்களையயல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம் ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)


செல்வம் ஒப்புரவு செய்யும் நேர்மையாளனிடம் சேருமாயின் அது பயன்படும் மரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (217)


செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின் அது வேர்முதல் கொழுந்துவரை எல்லா உறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயன்படும் மரத்தையயாக்கும்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (218)


கடப்பாட்டை அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்.

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு. (219)


ஒப்புரவாளன் வறியவன் ஆதலாவது தவிராது செய்யுந் தன்மையான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலை மையே.

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)


ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியை உடையதாம்.

23. ஈகை

23. ஈகை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியயதிர்ப்பை நீர துடைத்து. (221)


பொருள் இல்லாதவரும் திருப்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச்செய லாம். மற்றக் கைம் மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (222)


பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழி என்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது. பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாது என்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள. (223)


யான் ஏழை என்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும் அவ்விரப்போன் வேண்டியதொன்றை இல்லை என்னாது அவனுக்கு ஈதலும் ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான்கண்ணே உள்ளன.

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. (224)


ஒரு பொருளை இரந்தவர் அதைப் பெற்றதனால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும், இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் குடிப்பிறந் தானுக்குத் துன்பந்தருவதாம்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (225)


தவத்தால் வலிமை அடைந்தாரது வலிமையயல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே. அவ்வலிமையும் அப்பொறுத்தற்கு அரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)


வறியவரின் கடும்பசியைத் தீர்க்க. அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் பெற்றானாவன்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியயன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227)


எப்போதும் பலரோடும் பகிர்ந்துண்டு பயின்றவனைப் பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதல் இல்லை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (228)


தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்கார ராலும் இழக்கும் கன்னெஞ்சர் வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ?

இரத்தலின் இன்னாது மன்ற நிரம்பிய
தாமே தமியர் உணல். (229)


தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி, வறியார்க்கொன்று ஈயாது தாமே தமித்துண்டல் திண்ணமாக இரத்தலினும் தீயதாம்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)


ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றும் இல்லை. அவ்விறப்பும் வறியார்க்கொன்று ஈதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.

24. புகழ்

24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)


வறியார்க்கு வேண்டியவற்றை இயன்றவரை ஈக. அதனாற் புகழுண்டாக வாழ்க. அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ். (232)


உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்பவர் சொல்வதெல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டியதொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.

ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். (233)


தனக்கு இணை இல்லாவாறு உயர்ந்த புகழ் அல்லாமல் இவ்வுலகத்து அழியாது நிற்பது வேறு ஒன்றும் இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. (234)


ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது.

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (235)


புகழுடம்பின் கரு வளர்ச்சியடைவது போல் (முழு வளர்ச்சியுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும் அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும் திறப்பாடு உடையவர்க்கன்றி ஆகாவாம்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றிலின் தோன்றாமை நன்று. (236)


ஒருவன் இவ்வுலகத்திற்கு பிறக்கின் புகழ்க்கு ஏதுவான குணத்தொடு பிறக்க அக்குணம் இல்லாதார் பிறத்தலைவிடப் பிறவாதிருத்தலே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன். (237)


தமக்குப் புகழுண்டாக வாழாதவர் அது பற்றிப் பிறர் தம்மை இகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது, தம்மை இகழ்ந்தவரை நோவது எதற்கு?

வசையயன்ப வையத்தார்க் கெல்லாம் இசையயன்னும்
எச்சம் பெறாஅ விடின். (238)


ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின் அது உலகத்தில் உள்ள மக்கட்கெல்லாம் பழிப்பாகும் என்று கூறுவர் நல்லோர்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (239)


புகழைச் செய்யாத உடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

வசையயாழிய வாழ்வாரே வாழ்வார் இசையயாழிய
வாழ்வாரே வாழா தவர். (240)


தமக்குப் பழிப்பு இல்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர். புகழின்றி வாழ்பவரே உயிரோடு இருந்தும் இறந்தவராவர்.

25. அருளுடைமை

25. அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. (241)


செல்வங்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்தது அருளாகிய செல்வமே மற்றப் பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.

நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றான்
மேதரினும் அஃதே துணை. (242)


உத்திக்குப் பொருத்தமான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளை மேற்கொள்க. பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ்வருளே துணையாக முடியும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். (243)


இருள் திணிந்த துன்ப உலகமாகிய நரகத்துட் புகுதல், அருள் நிறைந்த நெஞ்சை யுடைய துறவியருக்கில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. (244)


மற்ற உயிர்களையயல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு, தன்னுயிர் அஞ்சுவதற்கு ஏதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர்.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலம் கரி. (245)


அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமும் இல்லை. இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள் பெரிய மாநிலத்திலுள்ள மக்கள் எல்லாரும் சான்றா ளராவர்.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். (246)


உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுபவர் முற்பிறப்பில் அறமாகிய உறுதிப் பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறத்தவர் என்பர் அறிவுடையோர்.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)


பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. (248)


ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை இழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர். ஆயின், அருட்பண்பை இழந்தவரோ ஒரேடியாய் அழிந்தவராவர்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (249)


உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின் தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும்.

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. (250)


ஒருவன் அருள் இல்லாமையால் தன்னினும் எளியவரை வருத்துமாறு அவர்மேற் செல்லும் பொழுது, தன்னினும் வலியவர் தன்னை வருத்த வரும் போது தான் அவர்முன் அஞ்சிநிற்கும் நிலையை நினைக்க.

26. புலான் மறுத்தல்

26. புலான் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (251)


தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன் எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)


பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை. அதுபோல அருளைக் கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (253)


பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல ஓர் உயிரியின் உடலைச் சுவையாக உண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது.

அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். (254)


அருள் என்பது என்னது எனின் கொல்லாமை. அருள் அல்லாதது எது எனின் கொல்லுதல். ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).

உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. (255)


ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊன் உண்ணாமை ஆகிய அறத்தால் நேர்வது. ஆதலால், ஒருவன் ஊன் உண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.

தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (256)


பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிகளைக் கொல்லார் எனின் பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (257)


புலால் என்பது வேறோர் புண்ணே. அவ்வுண்மையை அறியப்பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். (258)


மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர் ஓர் உயிரினின்று நீங்கிய உடம்பை உண்ணார்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)


தீயின்கண் நெய் முதலிய உணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (260)


ஓர் உயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.

27. தவம்

27. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)


இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களை யல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவே தவத்தின் வடிவாம்.

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)


தவப் பயனன்றித் தவ முயற்சியும் முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க்கே உண்டாகும். அத்தவத்தை முற்பிறப்பில் ஓரளவேனுஞ் செய்யாதார் இப்பிறப்பில் முயல்வது பயனில் முயற்சியாம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263)


துறவியர் அல்லாத மற்ற இல்லறத்தார் துறவியர்க்கு ஊன் உடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்து உதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்.

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)


அறியாமையால் தமக்கு மாறாக வந்த வலியோரையுந் தீயோரையும் சாவித்தலும் அறிந்ததினால் தம்மை விரும்பித் தம் உதவி நாடி வந்த எளியோரை வாழ்வித்தலும் தவத்தோர் கருதுவாராயின் அவர் தவ வலிமையால் அவை கூடும்.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (265)


தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளை யயல்லாம் விரும்பி யவாறே பெறக்கூடிய நிலைமை இருத்தலால் செய்ய வேண்டி தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)


உலகப் பற்றைத் துறந்து தவஞ் செய்வாரே தம் கருமத்தைச் செய்பவராவர். அவரல்லாதார் பிறவிக்கு ஏதுவான பொருள் இன்ப ஆசை வலையுள் அகப்பட்டுத் தமக்குக் கேடு செய்பவரேயாவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)


உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போலத் தவஞ் செய்ய வல்லவர்க்கு அதனால் வருந் துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும்.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும். (268)


தன் உயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.

கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)


தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)


இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருந்ததற்குக் கரணியம், தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே.

28. கூடா வொழுக்கம்

28. கூடா வொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். (271)


பிறரை வஞ்சிக்கும் மனத்தை உடையவனின் பொய் யயாழுக்கத்தை, அவன் உடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். (272)


தன் நெஞ்சமே குற்றம் என்று அறிந்ததை ஒருவன் செய்வானாயின் அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)


மனத்தை அடக்கும் வலிமை இல்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக்கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல் ஆவு கொல்லைக் காவலர் துரத்தாவண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274)


மனத்தை அடக்கும் வலிமை இல்லாதவன் தவக்கோலத்தின் கண் மறைந்து நின்று கூடாவொழுக்கம் ஒழுகுதல் வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்(று)
ஏதம் பலவுந் தரும். (275)


பிறர் தம்மைப் பெரிதும் மதிக்குமாறு யாம் இருவகைப் பற்றும் துறந்தேம் என்று சொல்வாரின் மறைவொழுக்கம், பின்பு தம் தீவினைப் பயனை நுகரும் போது, அந்தோ என் செய்தேன் என் செய்தேன் என்று தனித் தனியே வருந்திப் புலம்புமாறு, அவருக்குப் பல்வகைத் துன்பங்களையும் உண்டாக்கும்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)


உள்ளத்திற் பற்றறாது பற்று அற்றவர் போல் நடித்துப் பிறரை ஏமாற்றி வாழும் பொய்த் துறவியரைப் போலக் கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.

புறங்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. (277)


வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை உடைய வரேனும் உள்ளத்தில் அதன் மூக்குப் போல இருண்டிருப்பவரை உடையது இவ் வுலகம்.

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)


தம் மனத்தின்கண் குற்றம் இருக்கவும் தவத்தால் மாட்சிமைப்பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி அதன் கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப் பலர்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (279)


அம்பு வடிவில் நேராய் இருந்தாலும் செயலிற் கொடியது. யாழ் தண்டால் வளைந்த தேனும் செயலால் இனியது. அங்ஙனமே தவஞ்செய்வாருள்ளும் யார் கொடியர் யார் நேர்மையர் என்பதை அவரவர் கோலத்தாற் கொள்ளாது செயல் வகை யாலேயே அறிந்து கொள்க.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (280)


உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டு விடின் தலை மயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.

29. கள்ளாமை

29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)


கள்வன் என்று பிறரால் இழித்து எண்ணப்படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான், தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (282)


தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம். ஆதலால், பிறன் பொருள் எதையேனும் அவன் அறியாமற் கவர்வேம் என்று கருதற்க.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும். (283)


களவினால் உண்டான செல்வம் வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (284)


பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை, அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். (285)


அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டா காது.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். (286)


களவின்கண் ஊன்றிய வேட்கை உடையவர் தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுகமாட்டார்.

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)


களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை எல்லாப் பொருள் களின் இயல்பையும் உள்ளவாறு அளந்து அறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288)


பொருள்களின் இயல்பை உள்ளவாறு அறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல் போலக் களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். (289)


களவு அல்லாத பிறவற்றை அறியாதவர் வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)


களவு செய்வார்க்குத் தம்முடனேயே உள்ள தம் சொந்த உடம்பும் தவறும். அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகுந்தவறாது கிட்டும்.

30. வாய்மை

30. வாய்மை

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (291)


மெய்ம்மை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின் அது எவ்வகை உயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல் லுதலாம்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)


குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைக்குமாயின் பொய்யான சொற்களும் மெய்யான சொற்களின்பாற் பட்டனவாம்.

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293)


ஒருவன் தன் நெஞ்சு அறிந்ததொன்றைப் பிறர் அறியவில்லை என்று கருதிப் பொய் சொல்லாதொழிக. பொய் சொன்னானாயின், அதனை அறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன். (294)


ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின் அவன் உயர்ந்தோர் உள்ளத்தில் எல்லாம் உளனாவன்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (295)


ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின், அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். (296)


இம்மையில் ஒருவனுக்குப் பொய் சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை. உடம் வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)


ஒருவன் வாய்மை அறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின் அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். (298)


ஒருவனது உடம்புத் தூய்மை நீரால் உண்டாகும்; உள்ளத் தூய்மை வாய்மையால் அறியப்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (299)


ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்காகா; அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)


யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள் எவ்வகையிலும் மெய்ம்மை போலச் சிறந்த வேறு அறங்கள் இல்லை.

31. வெகுளாமை

31. வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கால் என். (301)


சினம் தாக்கக்கூடிய எளிய இடத்தில் அது எழாதவாறு அருளால் அல்லது அன்பால் தடுப்பவனே உண்மையில் அதைத் தடுப்பவனாவன். அல்லாத வலிய இடத்தில் அதுதானே எழாது அடங்குதலால் அதைத் தடுத்தால் என், தடுக்காவிட்டால் என்? இரண்டும் ஒன்றுதானே!

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற. (302)


ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம். அது தாக்கக்கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303)


எத்தகையோரிடத்தும் சினங் கொள்ளுதலைக் கருதுவதுஞ் செய்யற்க. அதனால் பல்வகையான தீமைகள் உண்டாகும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (304)


இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற சினம் அல்லாது வேறு பகைகளும் உண்டோ? இல்லை.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (305)


ஒருவன் தனக்குத் துன்பம் நேராமற் காக்க விரும்பினானாயின் தன் மனத்திற் சினம் வராமற் காக்க. காவானாயின் அச்சினம் தன்னையே கெடுக்குங் கடுந் துன்பங்களை வருவிக்கும்.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (306)


சினம் என்னும் நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை மட்டுமின்றி, அவருக்குத் துன்பக் காலத்தில் ஏமப்புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராதவரையுஞ் சுடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307)


சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்தும் சிறந்த பண்பென்று பொருட்படுத்தி அதைக் கொண்டவன் கெடுதல், நிலத்தின்கண் அறைந்தவன் கை தப்பாது நோவுறுதல் போன்றதாம்.

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (308)


கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும் அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம்.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (309)


தவஞ்செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதங் கருதான் எனின் அவன் பெறக்கருதிய பேற்றையயல்லாம் ஒருங்கே பெறுவான்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (310)


சினத்தின்கண் அளவுகடந்தவர், உயிரோடு இருப்பினும் செத்தவரைய யாப்பர். சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தார் அளவின ராவர்.

32. இன்னாசெய்யாமை

32. இன்னாசெய்யாமை

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)


சிறப்பைத் தரும் பெருஞ்செல்வம் பிறரை வருத்திப் பெறக்கூடுமாயினும் அதைப் பெறுதற்குப் பிறர்க்குத் தீங்கு செய்யாமை குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)


ஒருவன் தம்மேற்கறுவு கொண்டு தீயவற்றைச் செய்தவிடத்தும் திருப்பித் தாம் அவனுக்குத் தீயவை செய்யாமையும் குற்றமற்ற பெரியோர் கொள்கையாம்.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். (313)


தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமை கொண்டு தீங்கு செய்த வர்க்கும் துறவு பூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின் அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத் தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)


தமக்குத் தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)


பிறிதோர் உருயிர்க்கு வந்த துன்பங்களைத் தமக்கு வந்தன போலக் கருதிக் காவா விடத்து உயிர்களின் இயல்பைப் பற்றி அறிந்த அறிவி னால் ஏதேனும் ஒரு பயனுண்டோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். (316)


இவை மக்கட்குத் தீங்கு விளைப்பன என நால்வகை அளவைகளாலும் தான் அளந்து அறிந்தவற்றைப் பிறனிடத்துச் செய்தலைப் பொருந்தாமை துறந்தவனுக்கு வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)


மனத்தோடு கூடிய தீய செயல்களை எக்காலத்தும் எவர்க்கும் எத்துணைச் சிறிதும் செய்யாதிருத்தல் தலைமையான அறமாம்.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். (318)


பிறர் செய்யுந் தீயவை தனக்குத் தீயனவாயிருக்குந் தன்மையைப் பட்டறிகின்றவன் தான் மட்டும் மற்றவர்கட்குத் தீயவை செய்தல் என்ன கரணியம் (காரணம்) பற்றியோ!

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். (319)


ஒருவர் பிறருக்குத் தீயவற்றை ஒரு பகலின் முற்பகுதியிற் செய்வாராயின் அதன் விளைவாகத் தமக்குத் தீயவை அப்பகலின் பிற்பகுதியில் அவர் செய்யாமல் தாமே வரும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)


துன்பங்கள் எல்லாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பினும் பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்தாரையே சார்வனவாம். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர் பிறிதோர் உயிர்க்குத் துன்பஞ் செய்யார்.

33. கொல்லாமை

33. கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (321)


முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓர் உயிரையுங் கொல்லாமையாம். கொலைவினை பிற தீவினைகள் எல்லாவற்றின் பயனையும் ஓருங்கே தரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (322)


கிடைத்த உணவை இயன்றவரை பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு பல்வகை உயிர்களைளயும் பாதுக்காத்தல், அறநூலோர் இருவகை அறத்தார்க்குந் தொகுத்த அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாயதாம்.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (323)


முதற்படியாக நல்லறமாவது கொல்லாமையே. அதற்கு அடுத்தப்படியாக நல்லது வாய்மையாம்.

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி. (324)


பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியயன்று சொல்லப்படுவது எது என வினவின் அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (325)


பிறவி நிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும் பொருட்டு உலகப் பற்றைத் துறந்தவருள் எல்லாம் கொலை வினைக்கு அஞ்சிக் கொல்லா அறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று. (326)


கொல்லாமையைக் கடைப்பிடித்து ஓழுகுபவனின் வாழ்நாள்மேல் உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)


ஓர் உயிரியைக் கொல்லாத வழித் தன்னுயிர் தன் உடம்பினின்று நீங்கிவிடு மாயினும், தான் பிறிதோர் உயிரின் இனிய வுயிரை அதன் உடம்பினின்று நீக்கும் செயலைச் செய்யற்க.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. (328)


தேவரை நோக்கிச் செய்யும் வேள்வியிற் கொன்றால் இன்பமாகும் செல்வம் பெரிதாம் என்று ஆரியர் கூறினும் தமிழ்ச் சான்றோர்க்குக் கொல்வதினால் வரும் செல்வம் மிக இழிவானதாம்.

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. (329)


வேள்வியிலும் பிறவிடத்தும் கொலைத் தொழிலைச் செய்யும் பகுத்தறிவில்லா மாந்தர், தம்மை மக்களுள் உயர்ந்தோராகச் சொல்லிக் கொள்ளினும் அத் தொழிலின் கீழ்மையை அறியும் அறிவுடையோர் நெஞ்சத்துப் புலைத் தொழிலோ ராவர்.

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330)


அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர் வாழ்ப வரை, முற்பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர்.

34. நிலையாமை

34. நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)


நிலையில்லாத பொருட்களையும் நிலைமைகளையும் நிலையானவை யயன்று கருதும் பேதமை, கடைப்பட்ட அறியாமையாம்.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. (332)


ஒருவனுக்குப் பெருஞ்செல்லம் சேர்வது, ஆடல் அரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே. அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்த பின் அக் கூட்டங் கலைவது போன்றதே.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333)


செல்வம் யாரிடத்தும் நிலைக்காத தன்மையுடையது. ஆதலால், அத்தகைய செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான பயனுள்ள அறங்களை அப்பொழுதே செய்து கொள்க.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (334)


உயிரானது நாள் என்று அளவிடுவதாகிய ஒரு கால அளவு போல் தன்னைக் காட்டி வாழ்நாளைச் சமவளவான சிறுசிறு பகுதியாக அறுத்துச் செல்லும் வாளின் வாய்ப்பட்டிருப்பதாகத் தெரியும், அதைக் கூர்ந்தறியும் அறிஞர் இருப்பாராயின் அவருக்கு.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)


பேசமுடியாவாறு நாவை அடக்கி, விக்கல் எழுவதற்கு முன் இல்லறத்தா ரால் விண்ணிற்கும் துறவறத்தாரால் வீட்டிருக்கும் ஏற்ற அற வினைகள் விரைந்து செய்யப்படல் வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. (336)


ஒருவன் நேற்று இருந்தான், இன்று இல்லை என்று சொல்லும் பெருமையே உடையது இவ்வுலகம்!

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (337)


ஒரு நொடிப் பொழுதேனும் தம் உடம்போடு கூடியிருத்தலை உறுதியாக அறிய இயலாத மாந்தர், கோடிமட்டுமன்று, அதற்கு மேலும் பல எண்ணங் கொள்வர்.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. (338)


உடம்போடு உயிருக்கு உள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த முட்டைக் கூடு பின் பிரிந்து தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு (வெளிவந்து இறக்கை முளைத்த பின் ) பறந்து போன தன்மைத்தே.

உறங்குவது போலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)


ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யயாக்கும். அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யயாக்கும்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)


பல்வேறு நோய்கட்கும் பல்வகைப் புழுக்கட்கும் வாழிடமாகிய உடம்பு களுள் நெடுகலும் ஓண்டுக்குடியிருந்தே வந்த உயிருக்கு நிலையாக வதியத் தக்க ஓர் உறையுள் இதுகாறும் அமையவில்லை போலும்.