Thursday, December 26, 2019

49. காலம் அறிதல்

49. காலம் அறிதல்

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)


காகம் தன்னினும் வலிய கோட்டானை, அதற்குத் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அதுபோலப் பகைவரைப் போரில் வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. (482)


காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல், நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணம் கட்டி வைக்கும் கயிறாம்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்? (483)


சிறந்த கருவியயாடு தகுந்த காலமறிந்து செய்வாராயின், அரசர்க்கு முடித்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ? இல்லை.

ஞாலம் கருதினுங் கைகூடும் காலங்
கருதி இடத்தாற் செயின். (484)


ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்; அதற்குரிய வினையை அவன் தகுந்த காலம் அறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின்.

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர். (485)


உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதும் அரசர், மனக்கலக்கமின்றித் தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கு ஏற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)


வலிமிகுந்த அரசன் ஊக்கம் உள்ளவன் ஆயினும் பகைமேற் செல்லாது காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக்கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குதற்குப் பின்வாங்கும் தன்மையது.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (487)


தெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின உடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங் கொள்ளார். அவரை வெல்லுதற்கு ஏற்ற காலம் வரும்வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காந் தலை. (488)


அரசர் தம்மினும் வலிய பகைவரைக் காண நேர்ந்தால் அவருக்கு நற்காலம் உள்ளவரை அவருக்குத் தாழ்ந்து பணிக. அவர்க்கு முடிவுக்காலம் வரின் தலைக்கீழாக விழந்து மாய்வர்.

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். (489)


பகைவரை வெல்லக் கருதும் அரசன், தனக்கு வாய்த்தற்கு அரிய சமையம் வந்து சேரின் அப்போதே அதுவரை செய்தற்கு அரிதாய் இருந்த வினைகளைச் செய்து விடுக.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. (490)


வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன்தேடுங் கொக்குப் போல் ஒடுங்கி யிருக்க. மற்றுச் செல்லுங் காலம் வாய்த்தவிடத்து அக் கொக்கு விரைந்து மீனைக் கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக.

No comments:

Post a Comment