Thursday, December 26, 2019

20. பயனில சொல்லாமை

20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191)


அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன் எல்லா ராலும் இழிவாய் எண்ணப்படுவான்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. (192)


ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல், விரும்பப் படாத செயல்களைத் தன் நண்பனிடத்துக் செய்தலினுந் தீயதாம்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (193)


ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே அவன் நேர்மை (நீதி) இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (194)


ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல், நேர்மையோடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (195)


இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல் வாராயின் அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கி விடும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யயனல். (196)


பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்களுட் பதர் என்று சொல்லுக.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (197)


அறிவுடையோர் நேர்மை இல்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாது இருத்தலே அவர்க்கு நன்றாம்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (198)


அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார் மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். (199)


மயக்கத்தினின்று நீங்கிய குற்றமற்ற அறிவுடையார் பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)


ஏதேனும் ஒன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொற்களில் பயன் இல்லாதவற்றைச் சொல்லாதிருக்க.

No comments:

Post a Comment