Thursday, December 26, 2019

105. நல்குரவு

105. நல்குரவு

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041)


ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந் தருவது எது என்று வினவின் வறுமையைப், போலத் துன்பந்தருவது வறுமையே வேறொன்றும் இல்லை.

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)


வறுமை என்று சொல்லப்படுவதொரு கொடியான் ஒருவனிடத்து வருங்கால், அவனுக்கு இம்மை இன்பமும் மறுமை இன்பமும் இல்லா வாறு வருவான்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. (1043)


வறுமை என்று சொல்லப்படும் ஆசை, தன்னைக் கொண்டவனுடைய பழைமை யான குடிப்பண்பையும் அக்குடிப்புகழையும் ஒருங்கே கெடுக்கும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)


வறுமை தொன்றுதொட்டு பண்பட்டு வந்த நற்குடியிற் பிறந்தவர் வாயி லும் இழிவுதரும் சொல்லை தோற்றுவித்தற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டு பண்ணும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குறைத்
துன்பங்கள் சென்று படும். (1045)


வறுமை என்று சொல்லப்படும் ஒரு துன்பத்து உள்ளே பல பெருந் துன்பங்கள் வந்து சேரும்.

நல்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். (1046)


சிறந்த நூற்பொருளைத் தெளிவாக அறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொன்னாராயினும் வறியவர் சொல்லுஞ் சொல் தன்பொருட்டு சிறப்பை இழந்துவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். (1047)


அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன் தன்னைப்பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போலப் புறக்கணிக்கப் படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு? (1048)


நேற்றும் வந்து என்னைக் கொன்றது போலும் துன்புறுத்திய வறுமை இன்றும் வருமோ? வந்தால் ஐயோ! நான் என் செய்வேன்!

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது. (1049)


ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும், ஆயின், வறுமையில் இருந்துகொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது.

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. (1050)


நுகர்ச்சிப் பொருள்கள் இல்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையில் இருந்தும் அங்ஙனஞ் செய்யாது இருந்தல், பிறர் மனை களில் உள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டு ஒழித்தற் கேயாம்.

No comments:

Post a Comment