Thursday, December 26, 2019

57. வெருவந்த செய்யாமை

57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து. (561)


ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்று ஆராய்ந்து அவன் மேலும் அதைத் செய்யாதிருத்தற் பொருட்டு அவன் குற்றத்திற்கு ஏற்ப அவனைத் தண்டிப்பவனே நல்லரசனாவன்.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (562)


ஆட்சிச் செல்வம் தங்களிடம் நெடுங்காலம் நிற்றலை விரும்பும் அரசர், குற்றவாளியைத் தண்டிக்கும் போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி மென்மையாகச் செய்க.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (563)


அரசன் குடிகள் அஞ்சுவதற்கு ஏதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங் கோலனாயின் உறுதியாக விரைந்து கெடுவான்.

இறைகடியன் என்னுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். (564)


நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருஞ் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன் வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விçந்து இழப்பான்.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து. (565)


காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்ட வர்க்கும் சுடுமுகத்தனாகவும் இருக்கும் அரசனின் பெருஞ்செல்வம் பூதங்காத்தாற் போன்ற தன்மையை உடையது.

கடுஞ்சொல்லன் கண்ணில் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். (566)


அரசன் கடுஞ்சொற் சொல்பவனும் கண்ணோட்டம் இல்லாதவனும் ஆயின் அவனது பெருஞ்செல்வம் நீடித்தல் இன்றி அப்பொழுது கெடும்.

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். (567)


பொறுக்கத் தகாத கடுஞ்சொல்லும் குற்றத்தின் அளவிற்கு மிஞ்சிய தண்டனையும் அரசனது பகையை வெல்லுவதற்கு ஏற்ற இரும்பைத் தேய்த்து ஒழிக்கும் அரமாம்.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகுந் திரு. (568)


செய்ய வேண்டிய கருமத்தைப் பற்றி அமைச்சரொடு கலந்து எண்ணிச் செய்யாத அரசன் அக்கருமந் தப்பியவழிச் சினத்தின் வயப்பட்டு அவர் மேற் சீறின் அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கி வரும்.

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். (569)


போர் வருவதற்கு முன்பே தனக்குப் புகலாக ஓர் அரண் செய்து கொள் ளாத அரசன், போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு இன்மையால் அஞ்சி விரைந்து கெடுவான்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல(து)
இல்லை நிலக்குப் பொறை. (570)


கொடுங்கோல் அரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத் துணைவராகச் சேர்த்துக் கொள்வான். அக்கூட்ட மல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்) இல்லை.

No comments:

Post a Comment