128. குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. (1271)
நீ சொல்லாது மறைத்தாலும், அதற்கு உடம்படாது உன் கட்டை மீறி, உன் மையுண்ட கண்கள் எனக்குக் குறிப்பாகச் சொல்லுவது ஒரு செய்தி உள்ளது. இனி அதை நீயே வெளிப்படையாகச் சொல்வாயாக.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (1272)
என் கண்ணிற்கு நிறைந்த அழகையும் பச்சை மூங்கில் ஒத்த தோளையும் உடைய என் இளங்காதலிக்குப் பெண்மை நிறைந்த இயல்பு மிகுதியாக உள்ளது.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு. (1273)
கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்து விளங்கித் தோன்றும் நூல்போல இப்பெண்ணின் அழககத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றது ஒரு குறிப்பும் உண்டு.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. (1274)
மொட்டின் முகப்பிற்குள் அடங்கிக் கிடந்து வெளியிற் பரவாத மணம் போல என் இளங்காதலியின் நகை அரும்பும் முறுவலுக்குள் உள்ளதாய் வெளியில் தோன்றாதது ஒரு குறிப்பு உண்டு.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து. (1275)
நெருங்கிய வளையல்களை அணிந்த என் காதலி, என்னிடத்து இல்லாத ஒன்றைக் கருதிக்கொண்டு அது கரணியமாக எனக்கு மறைத்து வைத்த குறிப்பு என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்தாவது ஒன்றை உடையதாய் இருக்கின்றது.
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. (1276)
காதலர் வந்து தம் பிரிவினாலான துன்பத்தை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணங் கலக்கின்ற கலவி இருந்த நிலைமையை நோக்கின், மீண்டும் அத் துன்பத்தை நீண்டகாலம் அரிதாக ஆற்றியிருந்து, அவரது அன்பின் மையையே நினைக்குந் தன்மையை உடையதாகும்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. (1277)
குளிந்த துறையை உடையவர் நம்மை உடம்பாற் கூடியிருந்தே உளத்தாற் பிரிந்தமையை அவர் குறிப்பால் அறியக் கூடிய நம்மினும் முற்பட்டு இவ் வளையல்கள் நுணுகி அறிந்தன.
நெருற்றுச் சென்றாரெம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. (1278)
எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போனார். அப்பிரிவிற்கு யாமும் மேனி பசலை அடைந்து எழுநாட் கழிந்த நிலையில் இருக்கிறேம்.
தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. (1279)
அவர் பிரிந்து செல்ல நான் இங்கிருப்பின் இவை நில்லா என்னுங் குறிப் பில் தன் தோட்கடகங்களை நோக்கி, அதற்கு ஏதுவாக இவை மெலியும் என்னுங் குறிப்பில் தன் மெல்லிய தோள்களையும் நோக்கி, அதன்பின் இவ் விரண்டும் நிகழாமல் நீங்கள் காதலருடன் நடந்து சென்று காத்தல் வேண்டும் என்னுங் குறிப்பில் தன் பாதங்களையும் நோக்கி, இங்ஙனம் உடன்போக்குக் குறித்த அச்செயலையே அன்று அவள் செய்தாள்.
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. (1280)
மகளிர் தம் காம நோயைத் தம் உயிர்த்தோழியர்க்கும் வாய்விட்டுச் சொல் லாது, கண்ணினாற் குறிப்பாக உணர்த்தி, அதைத் தீர்க்க வேண்டும் என்று இரப்பது தமக்கு இயல்பாக உள்ள பெண்தன்மை மேலும் ஒரு பெண் தன்மை உடைமை யாகும் என்பர் அறிந்தோர்.
No comments:
Post a Comment