Thursday, December 26, 2019

101. நன்றியில் செல்வம்

101. நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில். (1001)


தன் மனையிடம் எல்லா நிறைதற்கு ஏதுவான பெருஞ்செல்வத்தை ஈட்டி வைத்தும், கஞ்சத்தனத்தால் அதை நுகராதவன் அதைக்கொண்டு அவன் செய்யக் கிடந்ததொரு செயலுமில்லை.

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)


செல்வம் ஒன்றுமட்டும் இருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகும் என்று கருதி அதைப் பிறர்க்கு ஈயாது இறுகப் பற்றும் மயக்கத்தினால் இழிவான பிறப்பும் உண்டாம்.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. (1003)


பிறறொடு போட்டியிட்டுப் பெரும்பொருள் ஈட்டுவதையே பெரு விருப்பக் குறிக்கோளாகக் கொண்டு அதன் பயனாகிய புகழை விரும்பாத ஆண் மக்களின் பிறப்பு இந்நிலவுலகிற்குச் சுமை ஆவதன்றி ஒரு பயனும் படுவதன்று.

எச்சமென்று என்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்? (1004)


ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப் படாதவன் தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருது வானோ?

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். (1005)


பிறருக்கு ஈவதும் தாம் நுகர்வதும் ஆகிய இரண்டு இல்லாதவர்க்கு கோடிக் கணக்கான செல்வம் இருப்பினும் அது செல்வம் இருப்பதாகாது.

ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்(று)
ஈதல் இயல்பிலா தான். (1006)


தகுதி உடையவர்க்கு அவர் வேண்டியது ஒன்றையும் ஈயும் இயல்பு இல்லாத வானாய் அதன்மேல் தானும் நுகராதவனாய் இருப்பவன் அவ்வி ரண்டுஞ் செய்தற்கு ஏற்ற தன் பெருஞ்செல்வத்திற்கு ஒரு நோயாவன்.

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)


ஒரு பொருளும் இல்லாதவர்க்கு அவர் வேண்டிய ஒன்றைக் கொடாத வனது செல்வம் வீணாய்க் கழிதல், குணத்திற் சிறந்த கட்டழகி ஒருத்தி மணஞ்செய்து கொடுப்பார் இன்மையால் கணவன் இன்றித் தனித்த வளாய் மூத்த தன்மைத்து.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. (1008)


வறியவர்க்கு அருகில் இருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும் பப் படாதவன், செல்வம் உடையவனாய் இருத்தல், ஊர் நடுவில் எட்டி மரம் பழுத்தாற் போலும்.

அன்பொரீஇத் தற்செற் றறம்நோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். (1009)


ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால் உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்பு செய்தலை யயாழிந்து, தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து, வறியார்க்கு ஈதலாகிய அறத்தைத் கருதவுஞ் செய்யாது வருந் தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வருங் கொள்ளைக்காரரும் ஆகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010)


ஈகையாற் புகழ் பெற்ற செல்வர் குறுங்கால வறுமை யடைதல் உலகத்தை வழங்கிவரச் செய்வதாகிய முகில் (மேகம்) சிற்றிடைக் காலம் பெய்யாது வறட்சி மிகுந்தாற் போன்ற தன்மையுடையது.

No comments:

Post a Comment