Thursday, December 26, 2019

93. கள்ளுண்ணாமை

93. கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். (921)


கள்ளின்மேற் பெருவிருப்பங் கொண்டு நடப்பவர், ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார். அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர்.

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார். (922)


உயிரையும் மதிப்பையும் காத்துக்கொள்ள விரும்புபவர்கள் கள்ளை உண்ணாது இருக்க. அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடை யோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (923)


மக்கள் எக்குற்றஞ் செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தாய் முன்பும் கள் உண்டு வெறித்தல் குன்பந் தருவதாம். பின்பு, எக்குற்றமும் பொறாத அறிவுடையோர் முன் அது எத்தகையதாம்?

நாணெஎன்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)


கள்ளுண்டல் ஆகிய பழித்தற்கு உரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு, நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். (925)


ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக் கள்ளால் வரும் மெய்ம் மறதியை வாங்குதல், செய்யும் முறைமை அறியாமையைக் கரணியமாக உடை யதே.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (926)


உறங்குபவர் உயிர் உடையவரேனும் அறிவும் மன உணர்வும் அந் நிலையில் இன்மையால் இறந்தவரை ஒப்பர். அதுபோல, கள்ளுண்பவர் இறவாது இருப்பினும் அறிவையும் உடல்நலத்தையும் என்றும் இழத்த லால் நாள்தோறும் நஞ்சு உண்ப வரை ஒப்பர்.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். (927)


கள்ளை மறைத்து உண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர், உள்ளூ ராரால் உள்ளத்தில் உள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போ தும் நகையாடப் படுவர்.

களித்தறியேன் என்பது கைவிடுக செஞ்சத்(து)
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928)


கள்ளை மறைவாக உண்டுவருபவன், அதை உண்ணாத வேளையில், ‘நான் கள்ளுண்டு அறியேன்’ என்று தன்னை ஒழுக்கம் உள்ளவனாகக் காட்டிக் கொள் வதை விட்டு விடுக. பிறர் அறியின் இழிவு என்று முன்பு தன் மனத்தில் மறைத்து வைத்திருந்த குற்றமும், மறுமுறை உண்ட பொழுதே முன்னினும் அதிகமாக வெளிப்பட்டுத் தோன்றும்.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (929)


கள்ளுண்டு வெறித்தவனை இது தகாது என்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல், நீர்க்குள் முழுகினவனை விளக்கு ஒளியால் தேடிப்பார்த் தலை யயாக்கும்.

கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (930)

கள்ளுண்பான் ஒருவன் தான் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளை யில் கள்ளுண்டு வெறித்த பிறனைக் காணும்போது தான் உண்டபொழுது தனக்கு இருந்த மயக்கத்தையும் உவமை அளவையால் அறிந்து, அதுவும் இத்தகையதே என்று கருதான் போலும்!

No comments:

Post a Comment