Thursday, December 26, 2019

89. உட்பகை

89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். (881)


மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோய் செய்வனவாயின் தீயனவேயாம். அதுபோலத் தமக்குந் துணையாய் இருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செய்வனபோல் தோன்றித் தீமை செய்யின் தீயனவே யாம்.

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. (882)


கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு அஞ்ச வேண்டுவது இல்லை. ஆனால், உறவினர் போல் இருந்து மறைவாகப் பகைக்கும் உட்பகைவரின் போலி உறவிற்கு மிகுதியாக அஞ்சுக.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். (883)


உட்பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க. ஏனெனில், அங்ஙனங் காவாவிடின், தனக்குத் தளர்ச்சி வந்த விடத்து, அவர் பகை குயவன் மட்கலத்தை அறுக்குங் கருவி அதனை அறுப்பதினும் மிகுதியான அளவு தன்னைக் கெடுத்து விடும்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். (884)


புறத்தில் திருந்தியது போல் தோன்றி அகத்தில் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின் அது அவனுக்கு சுற்றம் துணையா காமைக்கு ஏதுவாகிய பல குற்றத்தையும் உண்டு பண்ணும்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். (885)


புறம்பாக உறவு முறையயாடு கூடிய உட்பகை ஒருவனுக்கு, சிறப்பாக அரசனுக்கு, உண்டாகுமாயின் அது அவனுக்கு இறக்குந் தன்மையான பல குற்றத்தையும் உண்டுபண்ணும்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. (886)


தனக்கு உள்ளானவர் இடத்திலேயே பகைமை தோன்றுமாயின் ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம்.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினுங் கூடாதே
உட்பகை உற்ற குடி. (887)


உட்பகை உண்டான குடியார் செப்பும் அதன் மூடியும் பொருந்தினாற் போல வேற்றுமை தெரியாது புறத்திற் கூடினாராயினும் அகத்தில் கூடாதவரே ஆவர்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. (888)


உட்பகை உண்டான குடி அரத்தால் அராவப்பட்ட இரும்பு போல உட்பகையால் அராவப்பட்டு வலிமை குன்றும்.

எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. (889)


உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதி போன்ற சிற்றள வினதே ஆயினும் வலிமைமிக்க தனிப்பட்டவனையும் குடும்பம் அல்லது இனத்தையும் அரசையும் அழிக்க வல்லதாம்.

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று. (890)


மனபொருத்தம் இல்லாதவரோடு கூடி வாழும் வாழக்கை ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு கூடி வதிந்தாற் போலும்.

No comments:

Post a Comment