Thursday, December 26, 2019

107. இரவச்சம்

107. இரவச்சம்

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். (1061)


தம்மிடம் உள்ளதை ஒளிக்காது, அரும்பெறல் உறவினர் வந்தாரே என்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை கூர்ந்து இறத்தல் அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும் செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். (1062)


இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்வார்க்கு உழைத்து உயிர் வாழ்தலேயன்றி இரந்து உயிர்வாழலையும் விரும்பி வகுத்தா னாயின் அக்கொடி யோனும் அவரைப் போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வண்பாட்ட தில். (1063)


வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீங்குவோம் என்று கருதாது, இரப்பால் நீங்குவோம் என்று கருதும் வன்மையைப்போல் வன்மைப்பாடு உள்ளது வேறொன்றும் இல்லை.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. (1064)


ஒரு சிறிதும் பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை உடம்படாத குணநிறைவு, உலகங்கள் எல்லாம் ஒன்றாகக் கூடினும் அவற்றில் இட்டுவைக்கும் இடமெல்லாங் கொள்ளாத பெருமையை உடையதாம்.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த(து)
உண்ணலின் ஊங்கினிய தில். (1065)


தெளிந்த நீர்போல் தெடுதெடுவென்று இருக்குமாறு சமைத்த கூழாயினும் தன் உழைப்பினால் வந்த உணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை.

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்(கு)
இரவின் இளிவந்த தில். (1066)


வேட்கை தணிக்கத் தண்ணீர் இன்றி இறக்கும் நிலைமையில் உள்ள ஒர் ஆவினுக்காக, ஒருவன் தண்ணீர் தருக என்று அறம் நோக்கி இரந்து கேட் கும் போதும் அவன் நாவிற்கு அவ்விரவைப் போல இழிவு தருவது வேறு ஒன்று மில்லை.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. (1067)


இன்றியமையாமை பற்றி இரக்க நேரின் தம்மிடம் உள்ளதை இல்லை என்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டா என்று இவ்வுலகில் இரப்பாரை யயல்லாம் நான் அவன் இரந்து வேண்டிக் கொள்கிறேன்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (1068)


வறுமை என்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பு இல்லாத தோணி வழியில் உள்ள கரத்தல் என்னும் பாறை யால் தாக்கப்படும்போது பிளந்துபோம்.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)


செல்வம் உண்மை இன்மையால் வேறுபட்டிருப்பினும், மாந்தர் பிறப்பி னாலும் உடல் உறுப்பமைதியினாலும் முற்றும் ஒத்திருக்கும் இருவருள், ஒருவன் இன்னொருவன் முன் சென்று நின்று இரக்கும் நிலையின் கொடு மையை நினைத்தால் எம் உள்ளமெல்லாம் நீராய் உருகியோடும். இனி, இரக்கப்பட்டவன் அந் நிலையைக் கண்ணாரக்கண்டும் இல்லை என்று மறுத்தலின் கொடுமையை நினைத்தாலோ, அவ்வுருகு நிலைதானும் இல் லாது முற்றும் இறந்துபோம்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்? (1070)


கரப்பவர் இல்லை என்று சொல்லிய அளவிலேயே இரப்பவர்க்கு உயில் போய்விடும் இனி, அவ்வில்லை என்னுஞ் சொல்லையே வாய் திறந்து சொன் னவர்க்கு அதனால் உயிர்போகாமல் இருப்பதால், அது எப்புரைக் குட் புகுந்து ஒளிந்து நிற்குமோ! அறிகிலம்.

No comments:

Post a Comment