Thursday, December 26, 2019

58. கண்ணோட்டம்

58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (571)


கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது.

கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. (572)


உலகநடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது. ஆதலால், அக்கண் ணோட்டம் இல்லாதார் இவ்வுலகத்தில் இருப்பது மாநிலத்திற்கு வீண் சுமையே யன்றி ஒரு பயனும் இல்லாததாம்.

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்? (573)


பாடுதற்குப் பொருத்தம் இல்லை எனின் பண்ணால் என்ன பயனாம்? அதுபோலக் கண்ணோட்டம் இல்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்?

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்? (574)


தகுந்த அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறு என்ன பயன்தரும்?

கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும். (575)


ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல அழகு செய்வது கண்ணோட்டம்; அவ்வணி கலம் இன்றேல் அது அறிவுடையோரால் புண் என்று உணரப்படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ(டு)
இயைந்துகண் ணோடா தவர். (576)


கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர் இயங்கு திணைய ராயினும் நிலைதிணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரத்தைப் போல்வர்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (577)


கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே யாவர். கண்ணுடையவர் எப்போ தேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்டம் இல்லாதவராகவும் இரார்.

கருமம் சிதையாமற் கண்ணோட வல்லார்க்(கு)
உரிமை உடைத்திவ் உலகு. (578)


நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண் ணோட்ட வல்ல அரசர்க்கு இவ்வுலகம் நிலையயான உரிமையாகுந் தன்மை உடையதாம்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)


தம்மை வருத்தியயாழுகும் இயல்பு உடையாரிடத்தும் பழைய நட்புக் கருதிக் கண்ணோட்டம் உடையராய் அவர் குற்றத்தைப் பொறுத்தொழு கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (580)


எல்லாராலும் விரும்பப்படத் தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட் டத்தை வேண்டுபவர், தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

No comments:

Post a Comment