123. பொழுதுகண்டு இரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (1221)
மாலைப்பொழுதே! நீ முன்னாட்களில் வந்த மாலைப் பொழுதே அல்லை; காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே இருக்கின்றாய், இந்நாள்.
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை? (1222)
நீயும் என்னைப்போலத் துன்பம் உடையையாய் இருக்கின்றாய். உன் னுடைய துணையும் என்னுடைய துணைபோல அன்பற்றதோ? சொல் வாயாக.
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும். (1223)
காதலரோடு கூடியிருந்த நாளெல்லாம் குளிர்ச்சி தோன்றிப் பசந்து வந்த மாலை, இந்நாளில் எனக்கு உயிர் வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றித் துன்பம் மேன்மேலும் வளருமாறு வருகின்றது.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். (1224)
காதலர் உடன் இருந்த நாளெல்லாம் என் உயிர் தளிர்ப்புற வந்த மாலை, அவர் நீங்கிய விடத்துக் கொலைக் களத்திற் கொலைஞர் வருவது போல என் உயிரைக் கவர வரும்.
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. (1225)
நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்கு யாது? மாலைப் பொழுதிற்குச் செய்த தீங்கு யாது?
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். (1226)
முன்பெல்லாம் எனக்கு இன்பஞ் செய்துவந்த மாலை, அதற்கு நேர்மாறாக இன்று துன்பஞ் செய்யும் என்பதைக் காதலர் பிரிவிற்கு முன் நான் அறிய வே இல்லை.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய். (1227)
இக்காம நோயாகிய பூ காலைப் பொழுதில் மொக்கு விட்டுப் பகற்காலம் எல்லாம் பேரரும்பாக முதிர்ந்து மாலைப் பொழுதில் மலராக விரியும்.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை. (1228)
முன்னெல்லாம் இனிதாய் ஒலித்த இடையன் புல்லாங் குழல், இதுபோது தீப் போலச் சுடும் மாலைப் பொழுதிற்கு முன் தூதாக வந்து என்னைக் கொல்வது போலத் துன்புறுத்தும் படைக்கலமும் ஆயிற்று.
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. (1229)
இன்று, கண்டார் எல்லாரும் மதிமயங்கும் வகை மாலை வரும் பொழுது, இந்நகர் முழுதும் மயங்கி நோய்த் துன்புறும்.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர். (1230)
இதுவரை காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாது இருந்த என் உயிர், இன்று பொருள் இயல்பையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து இம் மயங்கும் மாலைப் பொழுதில் இறந்து படுவதாகும்.
No comments:
Post a Comment