Thursday, December 26, 2019

85. புல்லறிவாண்மை

85. புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. (841)


ஒருவனுக்கு வறுமைகள் எல்லாவற்றுள்ளும் மிகக் கொடியது அறிவு இல்லாமை. மற்றச் செல்வம் இன்மையை உயர்ந்தோர் வறுமையாகக் கருதார்.

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். (842)


புல்லறிவாளன், ஒருவனுக்கு ஒருபொருளை மனமகிழ்ந்து கொடுத்தல் நேரின் அதற்குக் கரணியம் பெறுகின்றவன் செய்த முன்னை நல்வினை யேயன்றி வேறொன்றும் அன்று.

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்தல் அரிது. (843)


புல்லறிவாளர் தாமே தம்மைக் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம் அதைச் செய்தற்கு உரிய பகைவராலுஞ் செய்தற்கு இயலாதாம்.

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னுஞ் செருக்கு. (844)


புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது, என்னது என்று வினவின் அது யாம் விளங்கிய அறிவுடையேம் என்று தாமே தம்மை உயர்வாக மதிக்கும் மடம்பட்ட ஆணவம்.

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். (845)


புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றதாகக் காட்டிக்கொண்டு ஒழுகுதல், அவர் பிழையின்றிக் கற்றுத் தேர்ந்த நூலறிவு பற்றியும் பிறர்க்கு ஐயுறவை உண்டு பண்ணும்.

அற்றம் மறைத்தாலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (846)


புல்லறிவாளர் தம்மிடத்து உள்ள குற்றங்களை நீக்காவிடத்துக் தம் மரும உறுப்பு களை மட்டும் ஆடையால் மறைத்துக் கொள்ளுதல் சிற்றறிவாம்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (847)


பிறரிடம் சொல்லக்கூடாத உயிர்நாடியான மருமச் செய்திகளைத் தன் வாய் காவாது வெளிவிட்டுவிடும் புல்லறிவாளன் தானே தனக்குப் பெருங் கேட்டை வருவித்துக் கொள்வான்.

ஏவவும் செய்கலான் தான்றேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். (848)


புல்லறிவாளன் தனக்கு நன்மையனாவற்றை அறிவுடையார் செய்யச் சொல்லினுஞ் செய்வதில்லை. தானாகவும் தனக்கு நன்மையானவற்றை அறிந்து கொள்வதில்லை. அத்தகையவன் உயிர் உடம்பினின்று நீங்கும் அளவும் அவனைத் தாங்கும் உறவினர்க்கு எல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம்.

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானம் தாண்கண்ட வாறு. (849)


தன்னைப் பேறிவாளனாகக் கருதுவதால் பிறர் வாயிலாக ஒன்று அறியுந் தன்மை இல்லாத புல்லறிவாளனுக்கு அறிவு புகட்டப் புகுந்தவன், அவ னாற் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவன் என்னும் நிலைமையையே அடைவன். அவ்வாறு அறியுந் தன்மை இல்லாதவனோ, தான் அறிந்த வகையே சரி என்று நம்புவதால், இறுதியில் தான் முன்பு அறிந்தவாறே அறிந்தவனாக முடியும்.

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்(து)
அலகையா வைக்கப் படும். (850)


உயர்ந்தோர் எல்லாரும் உண்டு என்று சொல்லும் பொருளை இல்லை என்று மறுக்கும் புல்லறிவாளன், மண்ணுலகத்தில் மாந்தன் வடிவில் வாழும் பேயாகக் கருதப்படுவான்.

No comments:

Post a Comment