Thursday, December 26, 2019

60. ஊக்கமுடைமை

60. ஊக்கமுடைமை

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துரையரோ மற்று? (591)


ஒருவரைச் செல்வம் உடையார் என்று சொல்லத் சிறந்த கரணியமாய் இருப்பது முயற்சியுள்ளம். அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறு ஏதும் உடையராயினும் உடையராவரோ? ஆகார்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். (592)

முயற்சியுள்ளம் உடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது; மற்றப் பொருள் உடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நீங்கிவிடும்.

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். (593)


ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர் தம் செல்வத்தை இழந்தார் ஆயினும் அதை இழந்தேம் என்று துன்புறார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை. (594)


செல்வம் தளர்வு இல்லாத ஊக்கம் உள்ளவன் இடத்திற்குத் தானாகவே வழி வினவிக் கொண்டு செல்லும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு. (595)


நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவாகும். அதுபோல மாந்தரின் வாழ்வுயர்ச்சி அவருடைய ஊக்கத்தின் அளவாகும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)


அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவது எல்லாம் தம் உயர்ச்சி பற்றிய கருத் தாகவே இருக்க. பின்பு அவ்வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. (597)


போர் யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்த விடத் தும் தளராது தம் பெருமையை நிலை நாட்டுவர்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. (598)


ஊக்கம் இல்லாத அரசரும் பெருஞ்செல்வரும் ‘இவ்வுலகத்தில் யாமே வண்மை யுடையேம்’ என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (599)


யானை விலங்குகள் எல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளது ஆயினும் உருவப் பருமையுங் கொம்பும் இல்லாத புலி தன்னைத் தாக்கின், அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும்.

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. (600)


ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கம் மிகுதியே. அவ்வூக்க மிகுதி இல்லா தார் மக்களாகார், மரங்களாவர். மக்கள் வடிவில் இருப்பதே இம்மரங்க ளுக்குக் குல மரங்களொடு வேற்றுமைதாம்.

No comments:

Post a Comment