Thursday, December 26, 2019

106. இரவு

106. இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று. (1051)


இரப்போர் இரக்கத் தக்க ஈகையாளரைக் காணின் அவரிடம் இரக்க. அவர் இல்லை என்று கரந்தாராயின், அது வேர் குற்றமே யன்றி இரந்தவர் குற்றமன்று.

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். (1052)


இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியயாடு கிடைக்குமாயின் ஒருவனுக்கு இரத்தலும் இன்பந் தருவதாம்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்(று)
இரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)


கரத்தல் இல்லா நெஞ்சினை உடைய கடமை அறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும், இரப்போர்க்கு ஓர் அழகு உடையதாம்.

ரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (1054)


தம்மிடத்து உள்ள பொருளைக் கனவிலுங் கரத்தல் அறியாதவரிடத்து ஒன்றை இரத்தலும் வறியார்க்கு ஒன்று ஈதலே போலும்!

கரப்பிலார் வையகத் துண்மையால் கண்நின்(று)
இரப்பவர் மேற்கொள் வது. (1055)


வாய் திறந்து இளிவந்த சொல்லைச் சொல்லமாட்டாது ஒருவனுக்கு முன் நிற்கும் நிலையினாலேயே இரக்கும் மானியர், தம் உயிரோம்பும் பொருட்டு இரத்தலை மேற்கொள்வது, தம்மிடத்து உள்ள பொருளைக் கரவாது ஈயும் ஒருசில உலகத்து இருப்பதனாலேயே.

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். (1056)


தம்மிடத்து உள்ளத்தைக் கரத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால் தன்மானத்தை விடாது இரப்போர்க்கு வறுமையால் வருந் துன்பம் எல்லாம் ஒருசேரத் தொலையும்.

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து. (1057)


தம்மை அவமதித்துப் பேசாதும் இழிவாகக் கருதாதும் விரும்பிய பொருளைக் கொடுப்பாரைக் கண்டால் தன்மானமுள்ள இரப்போரின் உள்ளம் மகிழ்ச்சியாற் பொங்கி மேன்மேலும் உள்ளூர இன்புறுந் தன்மை யதாம்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. (1058)


வறுமையுற்றுங் களைகண் இன்றியும் இரப்பவர் இல்லாவிடின் குளிர்ந்த இடத்தை யுடைய பெரிய மாநிலத்து உள்ளார் செலவு வரவுகள் மரத்தி னாற் செய்யப்பட்ட உயிரில்லாத பாவை தன்னை இயக்கும் பொறிக் கயிற்றாற் சென்று வந்தாற் போலும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை? (1059)


ஒருவரிடம் சென்று ஒருபொருளை இரந்து பெறுதலை விரும்புவார் இல்லாவிடத்து அப்பொருளைக் கொடுப்பார்க்கு என்ன புகழுண்டாம்? ஒன்றுமில்லையே!

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலுங் கரி. (1060)


இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாதவிடத்து இரந்தவன் சினங் கொள்ளா திருத்தல் வேண்டும். முற்பிறப்பில் தானும் தன்னை இரந் தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே போதிய சான் றாம்.

No comments:

Post a Comment