Thursday, December 26, 2019

65. சொல்வன்மை

65. சொல்வன்மை

நாநலம் என்னும் நலனடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று. (641)


நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம். அந்நன்மை வேறு எவ்வகை நற்பேறுகள் உள்ளும் அடங்காது தனிப்பட்டதாம்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642)


தன் அரசனுக்கும் அவன் அரசு உறுப்புக்கட்கும் மேம்பாடும் அழிவும் தன் சொல்லால் வருமாதலால் அமைச்சன் தன் சொல்லில் தவறு நேராதவாறு போற்றிக் காக்க.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (643)


நண்பராய் இருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் பின்பு தம்மை விட்டுப் பிரியாவாறு வயப்படுத்தும் தன்மைகளை விரும்பித் தழுவி, பகை வராய் இருந்து தம் சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரும் பின்பு அப் பகைமை நீங்கி நட்பை விரும்பும் வண்ணம் சொல்வதே அமைச்சர்க்கு உரிய சொன்முறையாம்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில். (644)


சொல்ல வேண்டியதைச் சொல்லும் பொழுது தம் நிலைமையும் கேட்போர் நிலைமையும் செய்தியின் நிலைமையும் அறிந்து அவற்றிற்கு ஏற்பச் சொல்லுக. அங்ஙனஞ் சொல்வதினுஞ் சிறந்த அறவினையும் பொருள் வினையும் இல்லை.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645)


தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய வெறொரு சொல் இல்லாமை அறிந்து பின்பு அச்சொல்லைச் சொல்லுக.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். (646)


தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும்போது அவர் பின்னுங் கேட்க விரும்பு மாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி, பிறர் சொல்லைத் தாம் கேட் கும் போது மட்டும், அதிற் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக் கண ஒழுங்கும் இல்லாதிருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல் குற்றமற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம்.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வல்லல் யார்க்கும் அரிது. (647)


தான் சொல்லைக் கருதியவற்றைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லவ னவாய் அவை மிகப் பலவாயினும் எதையும் மறந்து விட்டுவிடாதவனாய் அவைக்கு அஞ்சாதவனாய் இருப்பவனை தருக்கத்திலும் மாறுப்பாட்டி லும் வெல்லுதல் எவருக்கு அரியதாம்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)


சொல்ல வேண்டிய செய்திகளை ஒழுங்கான வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால் உலகம் விரைந்து அவர் ஏவல் கேட்டு நடக்கும்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். (649)


தாம் கருதியவற்றைக் குற்றம் இல்லாத சில சொற்களால் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர், தேற்றமாக (நிச்சயமாக) வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர்.

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து)
உணர விரித்துரையா தார். (650)


தாம் கற்றுவைத்த நூற்பொருளைப் பிறர் தெளிவாக அறியும் வண்ணம் விளக்கிச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் தராத பூவையயாப்பர்.

No comments:

Post a Comment