Thursday, December 26, 2019

96. குடிமை


96. குடிமை

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேரக் குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாக ஆகா.

ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழக்கார் குடிப்பிறந் தார். (952)

நல்ல குடியிற் பிறந்தவர் ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.

நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையயன்ப வாய்மைக் குடிக்கு. (953)

எக்காலத்துந் திரிபில்லாது ஒரே சரியாய் ஒழுகும் உயர்குடிப் பிறந்தார்க்கு இரவலரும் இரப்போரும் வறிய உறவினரும் தம்மை அடைந்தபோது, முகம் மலர்தலும் இயன்றன கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலும் தாழ்வாகக் கருதாமையும் ஆகிய நான்கு குணமும் இயல்பாக உரிய கூறு என்பர் அறிந்தோர்.

அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (954)

உயர்குடிப் பிறந்தவர் பலவாக அடுக்கிய கோடிக்கணக்ககான பொன் னைப் பெறுவதாய் இருப்பினும் தம் ஒழுக்கங் குன்றுவதற்கு ஏதுவான இழிசெயல்களைச் செய்யார்.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. (955)

தொன்று தொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார் தாம் கொடுக்கும் பொருள் சுருங்கிப்போன விடத்தும் தம் கொடுக்குந் தன்மையினின்று நீங்குதல இல்லை.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். (956)

வசையற்று வருகின்ற எங்குடி மரபோடு ஒத்து ஒழுகக் கடவேம் என்னும் பூட்கை கொண்டவர் வறுமை வந்தவிடத்தும் வஞ்சனையைக் கையாண்டு சான்றாண்மை யயாடு பொருந்தாத செயல்களைச் செய்யார்.

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)

உயர்குடிப் பிறந்தவரிடத்து உள்ள குற்றம் வானத்தின்கண் வெண்ணி லாவில் உள்ள களங்கம்போல் எல்லார்க்குந் தெரியுமாறு உயர்ந்த விளங்கித் தோன்றும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றலின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)

குடிச் சிறப்புடையவனாய்ப் பிறந்தவனிடத்தில் அன்பின்மை காணப் படின் உலகம் அவனை அக்குடிப்பிறப்புப் பற்றி ஐயுறவு கொள்ளும்.

நிலத்தில் கிடந்தமை கால்கட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (959)

நிலத்தின் இயல்பை அதில் முளைத்த விதையின் முளை தெரிவிக்கும், அது போலக் குலத்தின் இயல்பை அதிற் பிறந்தவர் உரைக்குஞ் சொல் தெரிவிக்கும்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. (960)

ஒருவன் தனக்கு இம்மை மறுமை நன்மைகளை வேண்டுவானாயின், தான் நாணமுடையவனாய் இருத்தல் வேண்டும். தன் உயர்குடிப் பிறப் பைக் காத்துக் கொள்ள விரும்புவானாயின், பெரியர் எல்லாரிடத்தும் பணிவு உடையவனாய் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment