114. நாணுத்துறவு உரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்ல தில்லை வலி. (1131)
பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்குத் தொன்றுதொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றம் இன்றி வேறொரு வலிமையும் இல்லை.
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. (1132)
காமத் துன்பத்தைப் பொறாத உடம்பும் உயிரும் தமக்குக் காப்பான மடற்குதிரையை ஏறக் கருதுகின்றன. அதற்குத் தடையான நாணத்தை நீக்கி வைத்து.
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (1133)
நாணும் சிறந்த ஆண்டகைமையும் பண்டை நாளிற் கொண்டுதான் இருந்தேன். ஆயின் அவை காமத்தால் நீங்கிவிட்டமையால், காமம் மிக்கார் ஏறும் மடலினையே இன்று உடையவனாய் இருக்கின்றேன்.
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. (1134)
நான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணை களை, காமமாகிய பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போகின் றதே! நான் என் செய்வேன்!
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர். (1135)
நான் மாலை வேளையிற் படுங் காமத் துயரினையும் அதற்கு மருந்தாகிய மடலேற்றம் பற்றிய எண்ணத்தையும் மாலைபோல் கையை வளைந்த சிறு வளையல்களை உடைய உன் தலைவி தந்தாள்.
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண். (1136)
பேதைத் தன்மையுள்ள உன் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதே இல்லை. அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி.
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)
கடல் போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும், அதை நீக்குதற்கு மடலேறாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போலப் பெருந்தகுதியுடைய பிறப்பு இவ்வுலகத்தில் வேறொன்றும் இல்லை.
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். (1138)
இவர் நிலை என்னும் அடக்கப் பண்பு உடைமையால் இவரை நாம் மேற்கொள்வது அரிது என்று அஞ்சுதல் செய்யாது, மிகவும் அளிக்கத் தக்கார் என்று இரங்குதலுஞ் செய்யாது மகளிர் காமமும் அவர் மறைத் தலைக் கடந்து அம்பலத்திற்கு வருவதாயிற்று.
அறிகிலார் எல்லாரும் என்றேயயன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. (1139)
எனது காமம், ‘யான் இதுவரை அடங்கி நின்றதால் எல்லாரும் என்னை அறிந்திலர், இனிமேல் அவ்வாறு இராது நானே வெளிப்பட்டு அறிவிப் பேன்’ என்று எண்ணி இவ்வூர்ப் பெருந்தெரு வெல்லாம் மயங்கிச் சுழலும்.
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
அறிவிலாதார் யாம் பட்ட நோய்களைத் தாம் பட்டு அறியாமையால் யாம் காதாற் கேட்குமாறு மட்டுமன்றிக் கண்ணாலுங் காணுமாறு எம்மை நகை யாடுவர்.
No comments:
Post a Comment