Thursday, December 26, 2019

95. மருந்து

95. மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (941) 


மருத்துவ நூலார் ஊதை (வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும் தாம் இருக்க வேண்டிய அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல் வேறு நோய்கள் உண்டுபண்ணும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது
அற்றது போற்றி உணின். (942) 


ஒருவன் தான் முன் உண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து அதன் பின் உண்பானாயின், அவன் உடம்பிற்கு மருந்து என்றே ஒன்றுந் தேவையில்லை.

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு. (943) 


முன் உண்டது செரித்து விட்டால் பின் உண்பதைச் செரிமான ஆற்றல், பசி, பருவம், உழைப்பு, உணவு வலிமை முதலியவற்றின் அளவு அறிந்து, உடல்நிலைக்கும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அளவாக உண்ணுக, அங்ஙனம் உண்பதே பெறற்கு அரிய மாந்தன் உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலங் கொண்டு செலுத்தும் வழியாகும்.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. (944) 


முன் உண்டது செரித்த நிலைமையை அறிந்து முற்றப் பசித்தபின் உடற் கூறு பருவம் விரும்பம் காலம் இடம் முதலியவற்றொடு மாறுகொள்ளாத னவும், மணஞ் சுவை வலிமைகளால் மாறுகொள்ளாதனவுமான உணவு களைக் குறிக்கொண்டு உண்க.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு. (945) 


உடற்கூறு முதலியவற்றொடு மாறுக்கொள்ளாத உணவை ஒருவன் தன் விருப்பத்திற்கு இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்கும் அளவு குறைத்து உண்பானாயின் அவன் உயிர்க்கு நோயினால் துன்பம் உறுதல் இராது.

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். (946) 


குறைத்து உன்பதன் நன்மையைப் பட்டறிவால் அறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பது போல் மிகப் பேரளவாக உண்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். (947) 


ஒருவன் தன் உடற்கூற்றையும் அதற்கு ஏற்ற உணவையும் அதை உண் ணுங் காலத்தையும் அறியாது, தான் விரும்பிய உணவுகளையெல்லாம் விரும்பிய பொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்ற லுக்கு மேற்பட்டுப் பேரளவாக உண்பானாயின் அவனிடத்துப் பல்வகை நோயும் தோன்றி வளரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948) 


மருத்துவன் நோயாளியின் சொல்லினாலும் நாடியினாலும் பிற உடற் குறிகளாலும் சிறுநீர் கழிபொருள்களின் இயல்பினாலும் நோய் இன்னது என்று ஆராய்ந்து அறிந்து அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீங்கும் வழியை ஆய்ந்து கொண்டு, அது வெற்றியாக நிறைவேறுமாறு கையாள்க .

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949) 


சித்த மருத்துவத்தைக் கற்றவன் நோயாளியின் அளவையும் அவனது நோயின் அளவையும் காலத்தின் நிலைமையையும் நோக்கி, அவற்றிற்கு ஏற்றவாறு தன் நூலறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி மருத்துவஞ் செய்க.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)
அப்பால்நாற் கூற்றே மருந்து. (950) 


நோய்க்குச் செய்யும் மருத்துவம் நோயாளி, மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து அல்லது மருத்துவமுறை, அவனுக்குத் துணைவ னாய் இருந்து நோயாளியிடம் சென்று மருந்து கொடுப்பவன் என்று அப்பகுதிப்பட்ட நான்கு திறத்ததே. 

No comments:

Post a Comment