Thursday, December 26, 2019

98. பெருமை

98. பெருமை

ஒளியயாருவற் குள்ள வெறுக்கை இளியயாருவற்(கு)
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)


ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே. ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கு ஏதுவான ஊக்கமும் இன்றி எளிதாய் வாழக் கடவேம் என்று எண்ணுவதே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972)


மாந்தர் எல்லார்க்கும் தாய்வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே. ஆயின், அவரவர் செய்யுந் தொழில்களின் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரான அல்ல.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். (973)


பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுகா யப் படிமுறை ஒழுங்கில், பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சி யில் இருந்தும், ஒழுக்கங் கெட்டவராயின் உயர்ந்தோர் அல்லர். உண்மை யாகத் தாழ்ந்தவர் அல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர், பிராமண ரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவர் ஆகார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. (974)


ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும் குல மகளிர் போல ஓர் ஆடவனும் ஒரே மனைவியைக் காதலித்துத் தன் கற்பைக் காத்துக் கொண்ட போதே பெருமைக் குணமும் அவனிடத்தில் உளதாகும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். (975)


பெருமைக்கு ஏதுவான பண்பை இயற்கையாக உடையவர் பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. (976)


கல்வி, அறிவு, ஆற்றல், ஒழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்று வோம் என்னும் குறிக்கோள் அந்நால் வகையிலும் சிறியவராய் இருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். (977)


பெருமையைத் தரும் செல்வம், கல்வி, அதிகாரம், மதிநுட்பம் முதலிய வற்றின் மிகுதிதானும், தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதி இல்லாத சிறியோரிடம் சேரின் அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (978)


பெருமையுடையார் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கி ஒழுகுவர் மற்றச் சிறுமை யுடையார் எக்காலத்துந் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். (979)


பெருமைக் குணமாவது பெருமிதத்திற்கு ஏற்ற சிறப்பிருந்தும் அதை இயல் பெனக் கொண்டு அமைந்திருத்தல், சிறுமைக் குணமாவது ஒரு சிறப்பும் இல்லாதிருந்தும் அதைத் தன் மேல் ஏற்றிக் கொண்டு செருக்கின் எல்லை வரை சென்றுவிடுதல்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். (980)


பெருமையுடையார் பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர். மற்றச் சிறுமையுடையாரோ பிறர் குணத்தை எல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறி விடுவர்.

No comments:

Post a Comment