102. நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. (1011)
நன்மக்கள் நாணாவது தீய வினைகள் செய்ய வெட்கிப் பின்வாங்குதல் அஃதன்றித் தனித்து வெளிச் செல்லுதல், அறியாதவரும் முறைகாரருமான ஆடவரொடு உரையாடல், ஆடவர் உள்ள அவையிற் பேசுதல் முதலிய பிறவற்றிற்கு வெட்கப்படுதலும் கூச்சப்படுதலும் அழகிய நெற்றியை உடைய குலமகளிர்க்கே உரிய நாண்களாம்.
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (1012)
உணவும் உடையும் அவை யயாழிந்த பிறவும் மக்களுயிர்கெல்லாம் பொதுவாக உரியவாம். ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக உரியதாம்.
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. (1013)
எல்லா உயிர்களும் உடம்பைத் தமக்கு நிலைக்களமாக் கொண்டு அதனைப் பற்றும். அதுபோலச் சாண்றாமை நாண் என்னும் நற்குணத் தைத் தனக்கு நிலைக்களமாகக் கொண்டு அதனைப் பற்றும்.
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)
அறிவு நிறைந்தோர்க்கு நாணுடைமை ஒர் அணிகலமே. அவ்வணிகலம் இல்லை யாயின் அவரது பெருமித நடை அவருக்கு ஒரு நோயேயாம்.
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு. (1015)
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து அவ்வி ரண்டிற் கும் நாணுவாரை உலகத்தார் நாணிற்கு உறைவிடம் என்று சொல்வார்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். (1016)
உயர்ந்தோர் தமக்குப் பாதுகாப்பாகிய நாணினைக் கொள்வதன்றி, பரந்த ஞாலத்தைக் கைப்பற்ற விரும்பார்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர் நாணும் உயிருந் தம்முள் மாறான விடத்து நாணைக் காத்ததற் பொருட்டு உயிரை நீப்பர் உயிரைக் காத்தாற் பொருட்டு நாணினை நீக்கார்.
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து. (1018)
கண்டாருங் கேட்டாரும் ஆகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்வானாயின் அந்நாணாமை, அறம் நாணி அவனைவிட்டு நீங்கத்தக்க குற்றத்தை உடையதாம்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. (1019)
ஒருவன் தன் கொள்கை தவறி யயாழுகின், அத் தவறு அவன் குடிப் பிறப்பை மட்டும் கெடுக்கும். ஆயின், ஒருவனிடத்து நாணின்மை நிலைத்து நின்றவிடத்தோ அந்நிலைப்பு, அவன் நலம் எல்லாவற்றையும் கெடுத்துவிடும்.
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. (1020)
தம் மனத்தில் நாணில்லாத மாந்தர் நாணுடையார் போன்றே நடமாடும் நடமாட்டம் மரத்தினாற் செய்த சிறு படிமை, தன்னை ஆட்டும் பொறிக் கயிற்றால் ஏற்பட்ட ஆட்டத்தினால், தான் உயிருள்ளது போல் தோன்று மாறு பார்ப்பவர் கண்களை மயக்கினாற் போலும்.
No comments:
Post a Comment