Thursday, December 26, 2019

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691)


வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர் அவரி னின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெடுங்காமலும் தீயருகே குளிர் காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆர்க்கந் தரும். (692)


தம்மால் அடுக்கப்பட்ட அரசர் தம் பதவிக்கு ஏற்கச் சிறப்பாக விரும்புவ னவற்றைத் தாம் விரும்பாதிருத்தல் அவ்வரசர் வாயிலாகவே அமைச்சர் முதலியோரான தமக்கு நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)


அமைச்சர் தம்மைக் காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக் கொள்க. அவற்றை நிகழ்ந்தனவாகக் கேள்விப் பட்டு அரசர் ஐயுற்ற பின் அவரைத் தெளிவித்தல் எத்துணைச் சிறந்தவர்க்கும் அரிதாம்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியார் அகத்து. (694)


வலிமை நிறைந்த அரசர் அருகில் இருக்கும்போது அவர் காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித் தலையும் அடியோடு விட்டுவிடுக.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (695)


அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள் பற்றிச் பேச்சு நிகழும் போது அதில் எந்தப் பொருளையும் செவிசாய்த்து உற்றுக் கேளாமலும் அவனை அணுகி வினவாமலும் இருந்து, பின் அம்மறைபொருளை அடக்கி வைப் பது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக.

குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். (696)


அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செய்தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பை அறிந்து சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினுஞ் சொல்லா விடல். (697)


பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை அவன் கேட்டிலன் ஆயினும் சொல்லி, எப்போதும் வினைக்கு உதவாத வீண் செய்திகளை அவன் கேட்பினும் சொல்லாது விடுக.

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும். (698)


இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக் கருதாது அரசரிடத்து அமைந்துள்ள தெய்வத் தன்மையாடு பொருந்த ஒழுகுதல் வேண்டும்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். (699)


நிலைத்த உறுதியான அறிவினை உடையார் ‘யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டேம்’ என்று கருதித் தம் நிலைமையயாடு பொருந் தாதவற்றைச் செய்யார்.

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (700)


அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினோம் என்று கருதித் தமக்குத் தகாத வற்றைச் செய்யும் தவறான நட்புரிமை அமைச்சர் முதலியோருக்கு அழிவைத் தரும்.

No comments:

Post a Comment