Thursday, December 26, 2019

109. தகையணங்குறுத்தல்

109. தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. (1081)


இங்குத் தோன்றும் கண்ணியம் மிக்க காதணியுடையாள், இச்சோலையில் வதியும் தெய்வ மகளோ, அன்றேல் இறைவன் ஆய்ந்து படைத்த ஒரு சிறப்பான மயில்வகையோ, அன்றேல் அழகிற் சிறந்த ஒரு மாந்தப் பெண் தானோ, என்மனம் இவளை இன்னள் என்று அறியாது மயங்குகின்றது.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. (1082)


இத்தகைய அழகிய தோற்றம் உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்தும் ஒரு தெய்வப் பெண், தனக்குத் துணையாக ஒரு படையையுஞ் சேர்த்துக் கொண்டாற் போலும் தன்மையை உடையதாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)


காலன் என்று சொல்லப்படுவதை இதற்கு முன்பு கேட்டறிந்த தல்லது கண்டறியேன்; இப்போது கண்டறிந்தோன், அது பெண் தன்மையுடன் பெரிய அமர்த்த கண்களை உடையது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண். (1084)


பெண் தன்மையுடைய இப்பேதைமையாளுக்கு உள்ள கண்கள், தம்மைக் கண்டவரைக் கொல்லும் தோற்றத்துடன் கூடிக் கொடியனவாய் இருந்தன.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. (1085)


என்னைக் கொல்வது போல வருத்துவதாற் காலனோ, இடையிடை மருண்டு பார்ப்பதாற் பெண்மானோ, இவ்விரு தன்மையும் இல்லாது சில வேளைகளில் இருப்பதால் இயல்பான மாந்தக் கண்தானோ, இப்பெண் ணின் பார்வை இம் மூவகைத் தன்மையும் உடையதாய் இருக்கின்றது.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண். (1086)


அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக இருந்து மறைக்குமாயின் இவள் கண்கள் நான் நடுங்குவதற்கு ஏதுவான துன்பத்தைச் செய்ய மாட்டா.

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். (1087)


இப்பெண்ணின் சரியாத முலைகளின் மேல் அமைந்த கச்சு மதயானை யின் மேல் இரு மத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்த முகபடாத்தை யயாக்கும்.

ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென்பீடு. (1088)


போர்க்களத்திற்கு வந்து என் வலிமையை அறியாத பகைவரும் வந்த றிந்தார் வாயக் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவான என் பெருவலிமை இப்பெண்ணின் ஒளி பொருந்திய சிறு நெற்றி ஒன்றிற்கே ஐயோ! அழிந்துவிட்டதே!

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியயவனோ ஏதில தந்து. (1089)


புறத்துப் பெண்மானொத்த பார்வையழகையும் அகத்து நாணழகையும் உடைய இவளுக்கு இயற்கையும் தற்கிழமைச் சார்புமான இவ்வணிகளே அமைந்திருக்க, செயற்கையும் பிறிதின் கிழமைச் சார்புமான பிற அணி களைக் கொண்டு வந்து அணிதல் எதற்காம்!

உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. (1090)


காய்ச்சப்படும் இனிய மது தன்னைப் பருகினவருக்கன்றிக் காதலிக்கப் பட்ட பெண்போலத் தன்னைப் பார்த்தவருக்கும் மகிழ்ச்சி தருதல் இல்லை.

No comments:

Post a Comment