Thursday, December 26, 2019

118. கண் விதுப்பழிதல்


118. கண் விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம் கண் டது. (1171)

தான் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினால் அன்றோ இத்தணியா நோயை யாம் அடைந்தது. அங்ஙனம் இருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி அழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே!

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்? (1172)

மேல் விளைவதை ஆராய்ந்து அறியாது அன்று காதலரைச் காதலொடு நோக்கிநின்ற எம் மையுண்ட கண்கள் இன்று ‘இது நம்மால் வந்தது தானே! ஆதலாற் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்’ என்று அன்போடு கூறுபடுத்து உணராது, துன்புற்று வருந்துவது ஏன்?

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. (1173)

இக்கண்கள் அன்று எண்ணிப்பாராது தாமே காதலரைத் திடுமென்று நோக்கிவிட்டு, இன்றும் அவரைக் காணவில்லை என்று தாமே இருந்து அழுகின்ற செய்தி சிரிக்கத் தக்க தன்மையை யுடையது.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. (1174)

என் மையுண்ட கண்கள் நான் தப்ப முடியாமைக்கு ஏதுவான ஒழியாத காமநோயை என்னிடம் நிறுத்திவிட்டுத் தாமும் தொடர்ந்து அழமுடியா வண்ணம் நீர் வற்றி விட்டன.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண். (1175)

கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செய்த என் கண்கள் அத்தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவாய்த் துன்பப்படுகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. (1176)

எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது மிகவும் இனிதாவதே.

உழந்துழந் உள்நீர் அறுக, விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். (1177)

அன்று விரும்பி உள் நெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள், இன்று தூக்கம் இன்றி அழுந் துன்பத்தால் வருந்தி வருந்தித் தம் மகத்து உள்ள நீரெல்லாம் வற்றிப்போக.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண். (1178)

நெஞ்சத்தில் நேயங்கொள்ளாது வாய்ச்சொல்லால் மட்டும் நம்மை விரும் பியவர் இங்கே உள்ளார். ஆயின் அவ்வுண்மைக்கு மாறாக, என் கண்கள் அவரைக் காணாமையால் அமைதி இல்லாதிருக்கின்றன.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். (1179)

காதலர் வராது இருக்கும்போது அவர் வரவுநோக்கி வழிமேல் விழி வைத்துத் தூங்கா. அவர் வந்த பின்போ மீண்டும் பிரிதல் அஞ்சித் தூங்கா. இங்ஙனம் அவ்விரு நிலைமையிலும் என் கண்கள் பொறுத்ததற்கு அரிய துன்பத்தை அடைகின்றன.

மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. (1180)

எம்மைப்போலப் பறையறையுங் கண்ணையுடையார் தம் நெஞ்சில் அடங் கிய மறைபொருளை அறிதல் இவ்வூர் வாழ்நர்க்கு எளிதாகும்.

No comments:

Post a Comment