Thursday, December 26, 2019

42. கேள்வி

42. கேள்வி

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (411)


ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம். அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையானது ஆகலான்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)


செவி உணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது தீப்போலும் பசியால் வாட்டும் வயிற்றிற்கும் ஒரு சிறிது உணவு இடப்படும்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)


செவியுணவாகிய கேள்வியறிவினை உடையார், நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யயாப்பர்.

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (414)


ஒருவன் பொருள் நூல்களையும் உறுதி நூல்களையும் கற்றிராவிடினும், அவற்றைக் கற்றுத் தேர்ந்த பேரறிஞரிடம் கேட்டறிக. அக்கேள்வியறிவு ஒருவனுக்கு உலகியல் துறையிலேனும் ஆதனியல் துறையிலேனும் தளர்ச்சி நேர்ந்த விடத்து ஊன்றுகோலாந் துணையாகும். (ஆதனியல்- ஆன்மீகம் )

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)


ஒழுக்கமுடைய பெரியோர் வாய்ச் சொற்கள், வழுக்கும் சேற்று நிலத்தில் நடப் பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகின் வாழ்க்கை நடத்து வோர்க்கும் ஆட்சி செய்வோருக்கும் முன்பக்காலத்தில் உதவுந் தன்மையவே.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)


ஒருவன் எத்துணைச் சிறிதாயினும் நற்பொருள்களைக் கேட்டறிக. அக்கேள்வி யறிவு அத்துணைச் சிறிதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். (417)


பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வியறிவினை உடையோர், ஏதேனும் ஒரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும் தமக்குப் பேதையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார்.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (418)


கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் தம் புலனுக்கு ஏற்ப ஓசை ஒலிகளைக் கேட்கும் ஆயினும் செவிடாந் தன்மையனவே.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. (419)


நுண்ணிதாகிய கேள்வியறிவு இல்லாதார் பணிவான சொற்களை உடையர் ஆதல் இயலாது.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் ஏன்? (420)


மேனிலை மாந்தர்போல் செவியால் நுகரப்படும் அறிவுப் பொருள்களின் சுவை களை உணராது, வாயால் நுகரப்படும் உணவுப் பொருட்களின் சுவைகளை மட்டும் உணரும் கீழ்நிலை மாந்தர் சாவதினால் உலகிற்கு என்ன இழப்பு? வாழ்வதனால் அதற்கென்ன பேறு?

No comments:

Post a Comment