Thursday, December 26, 2019

35. துறவு

35. துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். (341)


ஒருவன் எவ்வெப்பொருளினின்று நீங்கினானோ, அவ்வப் பொருளாதல் துன்பம் உறுதல் இல்லை.

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல. (342)


எல்லாப் பொருள்களையுந் துறந்தபின் ஒருவருக்கு இம்மையில் உண்டாகக் கூடிய நன்மைகளும் பலவாம். அவற்றை விரும்பின் காலம் இருக்கும்படி விரைவில் துறக்க.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (343)


வீடு பெற விரும்புகின்றவன் ஐம்புல இன்ப நுகர்ச்சியையுங் கெடுத்தல் வேண்டும். அதன்பின் அந்நுகர்ச்சியின் பொருட்த் தான் தேடி வைத்தி ருந்த பொருள்களை எல்லாம் ஒருங்கே விட்டுவிடுதல் வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்ந்து. (344)


பற்று வைத்தற்கு உரிய ஒரு பொருளும் இல்லாமை வீடு பேற்றுத் தவத் திற்கு உரிய இயல்பாம். அஃதன்றி ஏதேனும் ஒரு பொருளுடைமையும் அத்தவத்தைப் போக்கி அதனால் மீண்டும் உலக ஆசையில் மயங்குதற்கு இடனாம்.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை. (345)


பிறப்பு நீக்கும் முயற்சியை மேற்கொண்டவர்க்கு அதை நீக்கும் வரை கருவியாக நின்று உதவும் உடம்பும் அதிகப்படியாம். அங்ஙனம் இருக்க வும் அதற்கு மேலும் சில வேண்டாத பொருள்களின் தொடர்பு எதற்காம்?

யானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்(கு)
உயர்ந்த உலகம் புகும். (346)


தான் அல்லாத உடம்பை நான் என்றும் தனக்குப் புறம்பான பொருளை எனது என்றும் கருதி அவற்றின் மேற் பற்று வைத்ததற்கு ஏதுவான மயக்கத்தைக் கெடுப்பவன், விண்ணவர்க்குங் கிட்டாது மேற்பட்ட வீட்டுலகத்தை அடைவான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (347)


இருவகைப் பற்றையும் இறுகப் பற்றி விடாதவரைப் பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி விடுவதில்லை.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (348)


முற்றத் துறந்தவர் வீட்டை அடைந்து உயர்ந்தார். அங்ஙனத் துறவாதவர் மயங்கிப் பிறவி வலைக்குள் அகப்பட்டார்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். (349)


ஒருவனுக்கு இருவகைப் பற்றும் நீங்கியபொழுதே அப்பற்று நீக்கம் அவன் பிறப்பை ஒழிக்கும். அவை நீங்காத பொழுது அவற்றால் மாறிமாறிப் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமையே காணப்படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)


எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே இயல்பாகப் பற்று இல்லாத வனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க.

No comments:

Post a Comment