Thursday, December 26, 2019

72. அவைஅறிதல்

72. அவைஅறிதல்

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (711)


சொல்லின் தொகுதியை அறிந்த தூய நடையினர் தாம் ஒன்றை அரச னிடம் சொல்லுபோது, அவனோடு இருந்த அவையின் திறத்தை அறிந்து அதற்கு ஏற்ப ஆராய்ந்து சொல்லுக.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (712)


சொற்களின் வழக்காற்றை அறிந்த நல்லறிஞர் அவையிற் பேசுஞ் சமையத்தை நோக்கி அவையினரின் மனநிலையைத் தெளிவாக அறிந்து அதற்கு ஏற்ப ஒரு பொருளைச் பற்றிச் சொல்க.

அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறிவார் வல்லதூஉம் இல். (713)


தாம் பேசும் அவையின் திறத்தை அறியாது அதன் முன் ஒன்று சொல்லு தலை ஏற்றுக்கொண்டவர் சொல்லுதலின் கூறுபாட்டை அறியா தவரார். அதோடு அவர் கற்றுத் தேர்ந்த கலையும் அவர் கல்லாததாகத் கருதப்படும்.

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். (714)


அறிவால் விளங்குவார்முன் தாமும் அறிவுச்சுடராக விளங்குக. அறிவில் லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச் சாந்தின் நிறத்தைக் கொள்க.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (715)


அறிவால் தம்மினும் மிக்கோர் அவையின்கண், அவரினும் முற்பட்டு ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம் அவையிற் பேசுவார்க்கு நல்லது என்று சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நல்லதே.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (716)


பரந்த நூற்பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞர் அவையில், வல்லான் ஒருவன் வழுப்படல், வீடுபேற்றின் பொருட்டுத் துறவு நெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந் நெறி யினின்றும் தவறி வீழ்ந்ததை யயாக்கும்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து. (717)


வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞர் அவைக்கண் உரை நிகழ்த்தின், பல நூல்களையுங் கற்று அவற்றின் பொருளை அறிந்த வரின் கல்வி விளங்கித் தோன்றும்.

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718)


பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை உணர வல்ல அறிவு டையோர் அவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல், தானாக வளரும் பயிர்நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்.

புல்லவையுள் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார். (719)


நல்ல அறிஞர் அவைக்கண், நல்ல பொருட்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார், அறிஞர் இல்லாச் சிறியோர் அவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லா திருக்க.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல். (720)


அறிஞராவரர் அறிவால் தம் இனத்தவர் அல்லாதார் அவைக்கண் நிகழ்த் தும் அரும்பொருட் சொற்பொழிவு சாய்கடைக்குள் ஊற்றிய பாலை போலும்.

No comments:

Post a Comment