Thursday, December 26, 2019

45. பெரியாரைத் துணைக்கோடல்

45. பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)


அறத்தின் இயல்பை அறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பைத் தரம் அறிந்து ஆய்ந்துபார்த்துத் தழுவிக் கொள்க.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)


தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி, அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மை யுடையாரை அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)


அறிவிலும் சூழ்வினையிலும் பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல் அரசர் பெறக்கூடிய அரும் பேறுகள் எல்லாவற்றுள்ளும் அரியதாம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை. (444)


அறிவு முதலியற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவர் ஆமாறு அவர் வழிநின்று ஒழுகுதல் அரசர்க்குரிய வலிமைகள் எல்லாற்றுள்ளுந் தலையானதாம்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (445)


மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால் அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க.

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (446)


தக்க அமைச்சரைச் சுற்றமாக உடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனைப் பகைத்தவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்று இல்லை.

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்? (447)


குற்றங்கண்ட விடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் உண்மைத் துணையாளரைத் தமக்குச் சிறந்தவராக் கொண்டொழுகும் அரசரைக் கெடுக்குந் திறமையுடைய பகைவர் உலகத்தில் யார்தான்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா இலானுங் கெடும். (448)


குற்றங்கண்ட விடத்துக் கடிந்துரைத்தற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை. (449)


முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் ( இலாப மும்) இல்லை. அதுபோல், தம்மொடு சேர்ந்து தம் அரசை, முட்டுக் கொடுத்துத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் எற்படும் நிலைபேறும் இல்லை.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (450)


அரசன் நற்குணச் செல்வரான பெரியாரொடு நட்பை விட்டுவிடுதல் தான் ஒருவனாக நின்று பலரொடு பகை கொள்வதினும் பதின்மடங்கு தீமை விளைப்பதே.

No comments:

Post a Comment