Thursday, December 26, 2019

115. அலர் அறிவுறுத்தல்

115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறிறியார் பாக்கியத் தால். (1141)


என் காதலியோடு எனக்குள்ள தொடர்பு அலராய் எழுகின்றதனால், அவளைப் பெறாது வருந்தும் என் அருமையான உயிர் அவளைப் பெற் றது போன்று மகிழ்ந்து நிலைபெறும். அவ்வுண்மையை என் நற்பேற்றி னால் அலர் கூறும் பலரும் அறியார்.

மலரன்ன கண்ணாள் அருமை அறியா(து)
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். (1142)


குவளை மலர் போலுங் கண்ணை உடையாளைப் பெறுதற்கு அருமையை அறியாது இவ்வூரார் அவளை எளியளாக்கி என்னொடு தொடர்புபடுத்தும் அலரை எனக்கு அளித்து உதவினர்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143)


யானும் என் காதலியும் ஆகிய எங்கட்குக் கூட்டமுண்மை இவ்வூரார் அறிதலால் விளைந்த அலர் எனக்கு ஏற்ற தொன்றன்றோ! அதைக் கேட்ட நான், அக்கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற்போல் இன்பு றுதற்கு ஏதுவான தன்மையை அவ்வலர் உடைத்தாகலான்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)


என் காமம் இவ்வூரார் எடுத்த அலராலே அலர்தலைக் கொண்டுள்ளது. அவ்வலர் இல்லையாயின் சுவையிழந்து சப்பென்றிருக்கும்.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. (1145)


கட்குடியர்க்குக் கள்ளுண்டு வெறிக்குந்தோறும் அக் கள் விருப்பமாதல் போலக் காமவின்பர்க்கு அலர் பரவுந்தோறும் அக்காமம் இனிதாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்ட ற்று. (1146)


யான் என் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு வேளையே. ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலவைக் கரும்பாம்பு கெளவின செய்தி போல, உலகம் எங்கும் பரவியுள்ளது.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய். (1147
)

இக் காமநோயாகிய பயிர் இவ்வூர் மகளிர் எடுக்கின்ற அலரை எருவாக வும், அது கேட்டு அன்னை கடிந்து கூறும் வெஞ்சொல்லை நீராகவும் கொண்டு, வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். (1148)


அயலாரும் பகைவரும் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்து விடுவோம் என்று கருதுதல் நெய்யை வார்த்து நெருப்பை அவிப்போம் என்று கருதுவதை யயாக்கும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை? (1149)


தலைநாளில் தம்மை எதிர்ப்பட்ட போதே, நான் உன்னை விட்டு ஒரு போதும் பிரியேன். ஆதலால் நீ அஞ்சுதலை விட்டு விடு என்று தேற்றி யவர் தாமே, இன்று கண்டார் பலரும் நாணும்வகை நம்மைத் துறந்தபின் அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாதே!

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்குமிவ் வூர். (1150)


வரைவிற்கு அல்லது, உடன்போக்கிற்கு ஏதுவாதல் நோக்கி நாம் முன்பே விரும்பிய அலரை இவ்வூர் இன்று தானே எடுத்துள்ளது. இனி நாம் நம் காதலரை வேண்டின், அவரும் வரைந்து கொள்ளவேனும் உடன் கொண்டு சொல்லவேனும் மகிழ்ந்து உடன்படுவர்.

No comments:

Post a Comment