Thursday, December 26, 2019

90. பெரியாரைப் பிழையாமை

90. பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாந் தலை. (891)


எடுத்துக் கொண்ட வினைமுயற்சிகளை எல்லாம் வெற்றியாக முடிக்க வல்லவரின் வல்லமையைத் தாழ்வாக மதியாமை தமக்குத் கேடுவாரமற் காத்துக் கொள்வார் செய்யுங் காவல்கள் எல்லாவற்றுள்ளும் தலைமை யானதாம்.

பெரியாரைப் பேணா தொழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (892)


அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவாராயின் அது அப்பெரியாரால் அவர்க்கு எப்போதும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. (893)


ஒருவன் தான் கேடு அடைவதை விரும்பினன் ஆயின், பிறரைக் கொல்ல விரும்பின் அப்பொழுதே கொல்லவல்ல பெரியாரிடத்துத் தவற்றைத் தம் அமைச்சரின் அல்லது துணைவரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது செய்க.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (894)


தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செய்தல் குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவன் ஆகிய கூற்றுவனை அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற் போலும்.

யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். (895)


கடுவலிமையுள்ள பேரரையனாற் சினக்கப்பட்டவர் அவனுக்குத் தப்பி எங்குச் செல்லினும் எங்கும் உயிரோடிரார்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896)


ஒருவன் வீடு பற்றி வேகும் போது அல்லது விளக்குத் தன்மேல் பட்ட போது தீயாற் சுடப்பட்டான் ஆயினும், எண்ணெயாலும் மருந்தாலும் ஒரு கால் சாவினின்று தப்புதல் கூடும். ஆயின், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர் ஒருவகை யாலும் தப்பார்.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்? (897)

ஆக்க அழிப்பிற்கு ஏதுவாகிய ஆற்றல் மாட்சியமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள் வாராயின், ஆறு உறுப்புக்களும் மாட்சியமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டி வைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியில் வெந்து சாம்பராய் விடுமோ!

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியயாடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. (898)


மலைபோலும் மாதவர், இந்நிலவுலகத்தில் அழிவின்றி நிலபெற்றவர் போல் தோன்றும் பெருஞ்செல்வப் பேரரசர் கெடக் கருதுவாராயின் அவர் தம் இனத் தொடும் அழிந்து போவர்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். (899)


உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர் சீற்றங் கொள்ளின் தேவருலக அரசனும் இடையே தன் பதவி இழந்து கெடுவான்.

இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். (900)


மாபெருந் தவ முனிவர் வெகுள்வாராயின் அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையை உடையவராயினும் தப்பிப் பிழையார்.

No comments:

Post a Comment