Thursday, December 26, 2019

67. வினைத்திட்பம்

67. வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)


வினை செய்வதில் திண்மை என்பது அதைச் செய்பவனின் மனத் திண்மையே. அஃது அல்லாத பிற எல்லாம் அதைப்போன்ற திண்மை யாகா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (662)


வினைத்திட்பத்தை ஆராய்ந்தறிந்த அமைச்சருடைய கொள்கை கேடு தரக்கூடிய வினைகளைச் செய்யாமையும் வினை செய்யுங்கால் தெய் வத்தால் நேர்ந்த இடையூற்றிற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டின் வழி என்று கூறுவர் அரசியல் நூலார்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமஞ் தரும். (663)


மறைத்துச் செய்ய வேண்டிய வினைகளை முடிந்த பின்னரே வெளிப்படு மாறு கமுக்கமாய்ச் செய்வதே வினைத்திட்பமாம். அங்ஙனம் இன்றி அத் தகைய மரும் வினைகள் இடையில் வெளிப்படுமாயின், நீக்க முடியாத் துன்பந் தருவனவாம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணஞ் செயல். (664)


ஒரு வினையை இன்ன கருவியால் இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று வழி சொல்வது எவருக்கும் எளிதாம். ஆனால், சொன்னவாறு அதைச் செய்து முடிப்பது பெரும்பாலார்க்கு அரிதாம்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். (665)


சூழ்வினையால் மேம்பட்டுப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரின் வினைத்திண்மை, பயனளவில் அரசனை அடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (666)


பொருள்களைப் பெற எண்ணியவர் அவற்றைப் பெறுவதற்கு வழியாகிய வினையில் திண்மை உள்ளவராக இருப்பாராயின் தாம் பெற எண்ணிய பொருட்களை யயல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தோர்க்(கு)
அச்சாணி அன்னார் உடைத்து. (667)


உருண்டு ஒடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணி போல வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது. ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)


தெளிவாக எண்ணித் துணிந்த வினைமுயற்சியில் பின்பு மன அசைவில்லாதும் காலந்தாழ்க்காதும் விரைந்து ஊக்கமாகச் செய்க.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)


வினை செய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும், அது பற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செய்க.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு. (670)


வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை, வேறு எத்தகைய உறுதி உடையவராய் இருப்பினும் உயர்ந்தோர் விரும்பார்.

No comments:

Post a Comment