99. சான்றாண்மை
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)
இது நமது கடமை என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டு ஒழுகுவார்க்கு நல்வினைகள் எல்லாம் செய்யப்பட வேண்டிய கடமை யாகும் என்று கூறுவர் அறிஞர்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று. (982)
சான்றோர் நலமாவது குணங்களால் ஆன நலமே. மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண். (983)
எல்லார் மேலும் உள்ள அன்பும், பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும், வேளாண்மையும், எளியார்க்குஞ் சட்ட நெறி அறியார்க்குங் காட்டுஞ் சிறப்பு இரக்கமும், உண்மையுடைமையும் எனச் சான்றான்மை என்னும் மண்ட பத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
நோன்மை கொல்லாமையைத் தனக்குரிய அறங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது. அதுபோலச் சாண்றாண்மை பிறர் குற்றத்தைச் சொல்லா மையைத் தனக்குரிய குணங்களுள் சிறப்பாகக் கொண்டுள்ளது.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. (985)
ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அக்கரு மத்திற்குத் துணையாவாரைத் தாழ்ந்து வேண்டித் தம்மோடு சேர்த்துக் கொள்ளுதல். இனி, சால்புடையார் தம் பகைவரைத் தம் துணைவராக மாற்றுதற்குக் கையாளுங் கருவியும் அதுவேயாம்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையில்லார் கண்ணும் கொளல். (986)
சான்றாண்மை என்னும் பொன்னின் மாற்றை அறிதற்கு உரை கல்லாகிய செயல் எதுவெனின், தம்மினும் வலியாரிடத்துத் தாம் அடையந் தோல்வி யைத் தம்மினும் மெலியாரிடத்துமே விரும்பி ஏற்றுக் கொள்ளுதல்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (987)
நமக்குத் தீயன செய்தவர்க்கும் நல்லனவே செய்யாவிடின் ஒருவரின் சான்றாண் மையால் என்ன பயனாம்?
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (988)
சான்றாண்மை என்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ஒருவனுக்கு வறுமை இழிவாகாது.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார். (989)
சால்பு என்னும் கடலிற்குக் கரையாகச் சொல்லப்படுவார் ஊழி முடிந்து உவர்க்கடல் கரைகடப்பினும் தாம் தம் சால்பு எல்லை கடவார்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. (990)
நற்குணங்கள் பலவும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின் ஞாலமும் (பூமியும்) தன் பொறையைத் தாங்காததாய் முடியும்.
No comments:
Post a Comment