Thursday, December 26, 2019

63. இடுக்கண் அழியாமை

63. இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில். (621)


ஒருவன் வினையாற்றும் போது இடையில் தடைபோலத் துன்பம் வரின் அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக. அதனை மேன்மேல் நெருங்கி மேற்கொள்வ தற்கு அது வழி வெறொன்றும் இல்லை.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)


வெள்ளம் போல் ஏராளமாக வந்த துன்பங்கள் எல்லாம் அறிவுடையவன் அவற்றால் ஒன்றுமில்லை என்று தன் மனத்தில் நினைத்த மட்டில் நீங்கிவிடும்.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்(கு)
இடும்பை படாஅ தவர். (623)


துன்பம் வருங்கால் துன்பப் படாதவர் அத்துன்பத்திற்கே துன்பஞ் செய்வர்.

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பா டுடைத்து. (624)


தடை ஏற்பட்ட இடமெல்லாம் பொறை வண்டி அழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருது போல் எடுத்துக்கொண்ட விççயை விடா முயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பப்படுதலை உடையதாம்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். (625)


இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும், மனங்கலங் காதவன் அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம்.

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்(று)
ஓம்புதல் தேற்றா தவர். (626)


செல்வக் காலத்தில் ‘யாம் இது பெற்றேம்’ என்று மகிழ்ந்து கைழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார், வறுமைக் காலத்தில் ‘யாம் செல்வத்தை இழந்தேம்’ என்று துயரப்படுவரோ? படார்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)


மேலோர், இவ்வுலகத்தில் இருதிணை உயிரோடு கூடிய உடம்புகளும் துன்பம் என்னும் வேலுக்கு இலக்கு என்று தெளிந்து தமக்குத் துன்பம் வந்தவிடத்து மனங்கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளார்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (628)


இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பு என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்துவிடத்துத் துன்பம் உறுதல் இல்லை.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)


இயற்கையாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன், அவ்விரு வழிகளிலும் தனக்குத் துன்பம் வந்து விடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்பம் உறுதல் இல்லை.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (630)


ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந் துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருது வானாயின் அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

No comments:

Post a Comment