Thursday, December 26, 2019

பொருட்பால் : 39. இறைமாட்சி

பொருட்பால்

39. இறைமாட்சி


படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)


படையுங் குடியுங் பொருளும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல் லப்பட்ட ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆணரிமா போல்வான்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (382)


அரசனுக்கு இயல்பான தன்மையாவது அஞ்சாமையும் கொடைத் தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாது இருந்தலாம்.

தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (383)


நாட்டை ஆளும் அரசனுக்கு அரசக் கருமங்களை விரைந்து செய்யுந் தன்மையும் அவற்றை அறிதற்கு எற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காது இருத்தல் வேண்டும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. (384)


ஆட்சித் தலைவனுக்குரிய அறவொழுக்கத்தினின்று தவறாது, அறமல்லா தவை தன்னாட்டிற் பிறராலும், பிறவுயிர்களாலும் நிகழ்வதையும் நீக்கி, போர் மறத்திலும் மாசில்லாத பெருமையும் உடையவனே தகுந்த அரசனாவான்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)


அரசியற்குப் பொருள் வருவாய்களை மேன்மேல் அமைத்தலும், அவ்வரு வாய் களின் வழி வந்த பொருட்களை ஓரிடத்துத் தொகுத்தாலும், தொகுத் தவற்றைப் பிறர் கவராமற் காத்தாலும் காத்தவற்றை அறம், பொருள், இன்ப வழிகளிற் செலவிடக் கூறிடுதலும் வல்லவனே நல்லரசன்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (386)


முறை வேண்டினவர்க்கும் குறை வேண்டினவர்க்கும் காண்பதற்கும் எளிய வனாய், பகைவரல்லாத யாரிடத்தும் இன்சொற் சொல்பவனாயிருப்பின், அவ்வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த் தும் கூறும்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. (387)


இனிய சொல்லுடன் வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு கூடித் தான் கருதியவாறு அமைவதாம்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையயன்று வைக்கப் படும். (388)


நடுநிலையாகத் தீர்ப்புச் செய்து எவ்வகையிலும் துன்பம் நேராது குடி களைக் காக்கும் அரசன் பிறப்பால் மாந்தனாயினும் அவனால் ஆளப் பெறும் மக்களாற் கடவுள் என்றே கருதப்படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ்த் தங்கும் உலகு. (389)


அரசன் தீய வழியிற் செல்லும் போது அஞ்சாது இடித்துரைக்கும் நல்ல மைச்சர், செவிக்கு இன்னாதனவாகச் சொல்லும் சொற்கள் பொறுக்கத் தகாதனவாயினும், அவற்றின் இனிய விளைவு நோக்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசனது குடைநிழலில் உலகந் தங்கும்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. (390)


தகுதியுடையவர்க்கு வேண்டுவன கொடுத்தலும் யாவரிடத்தும் அன்பாயிருத்தலும் நேர்மையான ஆட்சியும் தளர்ந்த குடிகளைப் பேணுதலும் ஆகிய இந்நான்கு செயலையும் உடையவன் அரசர் எல்லார்க்கும் விளக்காம்.

No comments:

Post a Comment