Thursday, December 26, 2019

126. நிறையழிதல்


126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையயன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251)

நாணாகிய தாழிட்டுப் பூட்டிய நிறையயன்னுங் கதவைக் காமவேட்கை யாகிய கோடரி வெட்டிப் பிளக்கும்.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளுந் தொழில். (1252)

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லதாய் இருந்தது. எல்லாருந் தொழில் நீங்கித் தூங்கும் நள்ளிரவிலும் என் உள்ளத்தை ஏவல் கொள்ளும்.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். (1253)

யான் இக்காமத்தை என்னுள்ளே அடக்கிவைக்கக் கருதுவேன். ஆனால், அது என் கருத்துவழி நிற்காமல் தும்மல் போலத் திடுமென்று வெளிப் பட்டு விடுகின்றது.

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும். (1254)

இதற்கு முன்பெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியி ருந்தேன். ஆனால், இன்று என் காமம் கட்டிற்கு அடங்காது அம்பலப் பட்டுவிட்டது.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று. (1255)

தம்மைத் துன்புறுத்திப் பிரிந்துசென்றார் பின் செல்லாது தாமும் நீங்கி நிற்கும் நிறையுடைமை, காமநோய்ப் படாதவர் அறிவதொன்றே யன்றி அந்நோய்ப்பட்டவர் அறிவ தொன்றன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். (1256)

என்னை துன்புறுத்திப் பிரிந்து சென்றவர் பின்னே யான் செல்லுதலை வேண்டுதலான் என்னை அடைந்துள்ள காமநோய் எத்தகையது! ஐயோ! இரங்கத்தக்கது!

நாணென ஒன்றா அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்? (1257)

நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யும் போது நாண் என்று ஒன்றை அறியமாட்டாது இருந்தேம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. (1258)

நம் நிறையாகிய அரணை அழிக்கும் படைக்கலம் பல நடிப்புச் செயல் களில் வல்ல கள்வராகிய நம் காதலரின் தாழ்மையான பேச்சன்றோ?

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. (1259)

அவர் வந்தபொழுது உரையாடாது ஊடவேண்டும் என்று கருதி அவர் முன் நில்லாது வேறு ஓர் இடத்திற்குப் போனேன். அங்ஙனம் போய்த் தான் என்ன? என் உள்ளம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, இனி இவ்வூடல் பயன்படாது என்று அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். (1260)

கொழுப்பைத் தீயில் இட்டால் உருகுவது போலக் காதலரைக் கண்ட வுடன் நிறை அழிந்து உருகும் உள்ளத்தை உடைய மகளிர்க்கு அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந்நிலையிலேயே நிற்கக் கடவேம் என்று கருது தல் உளதோ? இல்லையே!.

No comments:

Post a Comment