Thursday, December 26, 2019

76. பொருள் செயல் வகை

76. பொருள் செயல் வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். (751)


பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கப்படச் செய்யும் செல்வத்தை அல்லாமல் சிறந்த பொருள் ஒன்று இவ்வுலகத்தில் இல்லை.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு. (752)


மற்று எல்லா நலமும் உடையராயினும் செல்வம் இல்லாதவரைத் தாயுட் பட எல்லாரும் தாழ்வாகக் கருதுவர். வேறு ஒரு நலமும் இல்லாத வரா யினும் செல்வம் உடையாரை அரசனுட்பட எல்லாரும் மதித்துப் போற் றுவர்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (753)


செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தா விளக்கு எண்ணிய தேயத்துச் சென்று பகையயன்னும் இருளைப் போக்கும்.

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (754)


முறையறிந்து ஈட்டப்பட்டு ஒருவருக்குந் தீங்கு செய்யாது நேர்மையாக வந்த செல்வம் அதை ஈட்டியவனுக்கு அறத்தையும் விளைவிக்கும் இன்பத்தையும் வினைவிக்கும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (755)


குடிகளிடத்துத் தாம் கொள்ளும் அருளோடும் தம்மிடத்து அவர் கொள்ளும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தின் தேட்டத்தை அரசர் மனத் தாலும் பொருந்தாமல் தானே நீங்க விடுக.

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (756)


உடையோர் இன்மையாலும் எதிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த பொருளும் நில வாணிகத்தில் வண்டிகளிலும் நீர் வாணிகத்தில் மரக்கலங் களிலும் வரும் பண்டங்கட்கு வாங்கும் ஆயமும் தன் பகைவரைப் போரில் வென்றபின் அவரிடம் தண்டமாகவும் திறையாகவும் வாங்கும் பொருளும் அரசிறை அல்லாத பிற வழிகளில் அவரன் பெறும் பொருள்களாம்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. (757
)

அன்பு என்னும் நற்றாயினாற் பெறப்பட்ட அருள் என்னும் பிள்ளை, பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய வளர்ப்புத் தாயாலேயே பிழைக்கும்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்(று)
உண்டாகச் செய்வான் வினை. (758)


தன் கையிற் பொருளை வைத்துக்கொண்டு ஒரு வினையை மேற்கொண் டவன் அதைச் செய்தல் ஒருவன் மலைமேல் ஏறியிருந்து அடிவாரத்தில் நடக்கும் யானைப்போரைக் கண்டாற் போலும்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். (759)


வெற்றி பெறும் வினையை மேற்கொள்ள விரும்பும் அரசர் செல்வத்தை நிரம்ப ஈட்டுக. அவர்தம் பகைவரின் வீறாப்பை அறுத்தொழிக்கும் படைக்கலம் அதனைப் போற் கூரியது வேறொன்றும் இல்லை.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. (760)


நல்வழியில் வரும் செல்வத்தை நிரம்ப ஈட்டியவர்க்கு அதனொடு சேர்த்து எண்ணப் பெறும் மற்ற இரு பொருளாகிய அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.

No comments:

Post a Comment