Thursday, December 26, 2019

92. வரைவின் மகளிர்

92. வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (911)


ஒருவனை அன்பு பற்றி விரும்பாமற் பொருள் பற்றி விரும்பும் அழகிய வளையல் அணிந்த விலைமகளிர் தாம் கருதிய பொருள் பெறுமட்டும் தாம் அன்பு கனிந்தவ ராகக் கூறும் இனியசொல், அன்று இன்பந்தருவது போல் தோன்றினும் பின்பு துன்பத்தையே விளைவிக்கும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். (912)


ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்து அறிந்து அதைப் பெறும் பொருட்டுத் தாம் அன்புடையவராகச் சொல்லும் அன் பில்லா விலை மகளிரின் ஒழுக்க வகையை ஆராய்ந்து அறிந்து அவரொடு கூடாது விடுக.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. (913)


பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பு விலைமகளிரின் பொய்யான தழுவல், கூலிக்கு அமர்த்தப் பட்ட வன் இருட்டறையில் யாதொரு தொடர்பும் இல்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். (914)


அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் அறிவினை உடையார் அறத்தையும் இன்பத்தையும் நோக்காது பொருளையே பொருளாகக் கொண்ட விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற்படியார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். (915)


இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வி அறிவினை யுடையார், பொருள் கொடுத்தார் எல்லாரும் பொதுவாக நுகர்தற்கு உரிய விலை மகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத் திற்படியார்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். (916)


கல்வி அறிவாலும் நற்குண நற்செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர் ஆடல், பாடல், ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்து தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத்தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார்.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள். (917)


தீயவழியிற் செல்லாதவாறு மனத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல் லாத ஆடவர், காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளை யும் அதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர் தோள் களைத் தழுவுவார்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. (918)


அழகு, ஒப்பனை, நளினம், தளுக்கு, ஆடல், பாடல் முதலியவற்றில் ஆடவரை, சிறப்பாக இளைஞரை, மயக்கி வஞ்சிக்கும் விலைமகளிரின் தழுவலை, அவ்வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாத வர்க்குக் காமினிப்பேய் தாக்கு என்பர் அறிஞர்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. (919)


உயந்தோர் இழிந்தோர் என்றும் வேறுபாடு பற்றி ஒருவரையும் விலக்காது பொருள் கொடுத்தார் யாவரைம் தழுவும் விலைமகளிரின் மெல்லிய தோள்கள், அக் குற்றத்தை அறியும் உயர்வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகாம்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920)


இருவேறுபட்ட மனத்தை உடைய விலைமகளிரும் கள்ளும் சூதும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாம்.

No comments:

Post a Comment