Thursday, December 26, 2019

40. கல்வி

40. கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)


ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க. அங்ஙனம் கற்றப்பின் அதற்கேற்ப ஓழுகுதலைக் கடைப்பிடிக்க.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)


மாந்தர் பொதுவாக இலக்கம் என்று சொல்லுவதும் மற்ற எழுத்து என்று சொல்லுவதும் ஆன இருவகை நூற்கலைகளையும் இவ்வுலகிற் சிறப்பாக வாழ விரும்பும் மக்களுயிர்க்குக் கண் என்று சொல்லுவர் அறிந்தோர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (393)


கண் உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் கற்றோரே. மற்றக் கல்லாத வரே எனின், தம் முகத்தில் இரண்டு கண்களை அல்ல, புண்களையே உடையர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)


யாரொடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்போம் என்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே, சிறந்த கல்வியுடையார் செயலாம்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)


செல்வர்முன் வறியர்போல் தாமும் ஆசிரியர்முன் ஆசையால் தாழ்ந்து நின்று கல்வி கற்றவரே தலையானவராவர். அங்ஙனந் தாழ்ந்து நிற்றதற்கு நாணிக் கல்லாது விட்டவர் என்றுங் கடைப்பட்டவரே.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு. (396)


மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல் மக்கட்குக் கல்வி கற்ற அளவிற்கு அறிவு ஊறும்.

யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (397)


நிரம்பக் கற்றவனுக்கு எந்நாடுந் தன் நாடாம், எவ்வூருந் தன் ஊராம், அங்ஙனம் இருக்கவும், ஒருவன் தான் இறக்குமளவும் கல்லாது காலங் கழிப்பது எதன் பொருட்டு?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு)
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)


ஒருவனுக்கு, தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாக நின்று உதவுந் தன்மையை உடையது.

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)


சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர் தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு மேன் மேலுங் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)


ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. மற்றப் பொருட் செல்வங்கள் எல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோந் தன்மையன ஆதலில் சிறந்த செல்வங்களாகா.

No comments:

Post a Comment