Thursday, December 26, 2019

86. இகல்

86. இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். (851)


மாறுபாடு, இயங்கு திணைப்பட்ட எல்லா உயிர்கட்கும் இனத்தொடு கூடி வாழாமைக்கு ஏதுவான பிரிவனை என்னும் தீய குணத்தை வளர்க்கும் மனநோய் என்று கூறுவர் அறநூலார்.

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. (852)


ஒருவன் தன்னொடு கூடி வாழாமை கருதி வெறுப்பன செய்தான் ஆயினும் அவனொடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் தீயவற்றைச் செய்யாது இருத்தல் சிறந்ததாம்.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவவில்லாத்
தாவில் விளக்கந் தரும். (853)


மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பந்தரு நோயை ஒருவன் தன் மனத் தினின்று நீங்குவான் ஆயின், அது அவனுக்கு அழியாத குற்றமற்ற புகழைத் தரும்.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். (854)


மாறுபாடு என்று சொல்லப்படும் தலையாய துன்பம் ஒருவனுக்கு இல்லை யாயின் அவ்வில்லாமை அவனுக்குத் தலையாய இன்பத்தை விளைக்கும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர்? (855)


தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாது அதன் எதிரே வெள்ளத்து நாணல் போற் சாய்ந்து ஒழுக வல்லாரை வெல்ல முனையுந் தன்மை உடையோர் யார்தான்?

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. (856)


பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லது என்று அதனை மேற்கொள் வானது உயிர்வாழ்க்கை நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிக நெருங்கியன வாம்.

மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர். (857)


மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினை யுடையார் வெற்றியயாடு பொருந்தும் அரசியல் உண்மைகளை அறியமாட்டார்.

இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு. (858)


தன் உள்ளத்தில் எழும் மாறுபாட்டை ஏற்காது விடுதல் ஒருவனுக்கு ஆக்கந் தருவதாம். அங்ஙனம் இன்றி அதில் மேற்படுவதில் முனையின், கேடும் அவனிடத்து வருவதில் முனையும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணுங் கேடு தரற்கு. (859)


ஒருவன் தனக்கு ஆக்கம் வருங்காலத்தில் மாறுபாடு கொள்ளுதற்குக் கரணியம் ஏற்படினும் அதைக் கொள்ளக் கருதான். தனக்குக் கேட்டை வருவித்ததற்குக் கரணியம் இன்றியும் அம்மாறுபாட்டில் மேற்படுதலைக் கருதுவான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னுஞ் செருக்கு. (860)


ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றினாலேயே தீயன எல்லாம் உண்டாகும். அதற்கு மறுதலையான நட்பினால் நல்ல நேர்பாடு (நீதி) என்னும் செல்வம் உண்டாகும்.

No comments:

Post a Comment