Thursday, December 26, 2019

41. கல்லாமை

41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)


அறிவு நிரம்புவதற்கு ஏதுவான நூல்களைக் கல்லாது ஒருவன் (அவையின் கண்) சொற்பொழிவாற்றத் தலைப்படுதல் அறைகள் வகுக்காமலே வட்டாட்டம் ஆடுவதை யோக்கும்.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் தற்று. (402)


கல்வி இல்லாதவன் ஒர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல், இயல்பா கவே முலையிரண்டும் இல்லாத பேடி பெண் தன்மையை விரும்பினாற் போலும்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (403)


தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோர் அவை யின்கண் உரை நிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாய் இருப்பராயின் கல்லாதவரும் மிக நல்லவரேயாவர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார். (404)


கல்லாதவனுக்குச் ஒரோவழித் தற்செயலாகத் தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும் அறிவுடையோர் அவனைப் பாராட்டும் அளவில் அதை உயர் வாகக் கொள்ளார்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (405)


நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும், அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும்போது கெட்டுப்போம்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். (406)


நூல்களைக் கல்லாதவர், உடம்போடு உள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினர் ஆதலன்றிப் பிறர்க்குப் பயன்படாமையால் ஒன்றும் விளையாத உவர் நிலத்தையே ஒப்பவராவர்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. (407)


நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும் சுண்ணச் சாந்தினால் மாட்சிமைப்படப் புனைந்தமைக்கு படிமையின் எழுச்சியும் அழகும் போலும்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (408)


கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம், கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றார் அனைத்திலர் பாடு. (409)


கல்லாதவர், கல்வி நிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார நிலைமையும் பற்றிய மேல்வகுப்புக்களிற் பிறந்தாராயினும் அந்நால் நிலைமையும் பற்றிய கீழ்வகுப்புக்களிற் பிறந்திருந்துங் கற்றவரைப்போல் அத் துணைப் பெருமையுடையவர் அல்லர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (410)


விளங்கிய நூல்களைக் கற்றவரோடு கூடியுள்ள மற்றக் கல்லாதவர், பகுத்தறி வுள்ள உயர்திணை மக்களொடு அஃறிணை விலங்ககள் போல்வர்.

No comments:

Post a Comment