Friday, December 27, 2019

7. மக்கட் பேறு

7. மக்கட் பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. (61)


இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக் கூடிய பிள்ளைப்பேறு அல்லாத வேறு சிறந்தவற்றை யாம் அறிந்த தில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். (62)


பழி தோன்றாத நற்குணங்களை உடைய மக்களைப் பெறின் பெற்றோரை எழுபிறவி அளவும் துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். (63)


தம் மக்களைத் தம் செல்வம் என்று பாராட்டுவர் பெற்றோர், அம்மக்களின் மகச் செல்வம் அவரவர் வினைக்கேற்றவாறு வரும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (64)


தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப்பட்ட சோறு. பெற்றோருக்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவர் உணவினும் மிக இனிமை யானதாம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (65)


பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம். அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)


தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர் புல்லாங் குழலிசை இனிது என்றும் செங்கோட்டியாழிசை இனிது என்றுங் கூறுவர்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (67)


தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றோர் அவையின்கண் முதன்மையாய் இருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமான் ஆக்குதல்.

தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68)


தம்மினும் மிகுதியாக, தம் மக்கள் கல்வியறியுடையராய் இருத்தல் பெற்றோராகிய தமக்கு மட்டுமின்றி இம்மண்ணுலகத்து உள்ள மற்றெல்லா மக்கட்கும்இன்பந தருவதாம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)


தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோன் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய், தான அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)


தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி , மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறு அளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம் மாறாவாது, தன்அறிவாற்றலையும் நற்குண நற்செயல் களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ் சொல்லை அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம்.

No comments:

Post a Comment