Thursday, December 26, 2019

68. வினை செயல்வகை

68. வினை செயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தாங்குதல் தீது. (671)


ஆராய்ந்து எண்ணுவதன் இறுதியாவது, இதை இன்னவாறு செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொள்ளுதலே. அத் தீர்மானத்தை உடனே நிறை வேற்றாது காலங் கடத் துவது குற்றமாகும்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672)


மெள்ளச் செய்ய வேண்டிய வினைகளை மெள்ளச் செய்க. விரைந்து செய்ய வேண்டிய வினைகளை விçந்து செய்க.

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (673)


இயலும் இடமெல்லாம் போரால் வினைசெய்தல் நல்லதே. அது இயலா விடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் எண்ணிச் செய்க.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயயச்சம் போலத் தெறும். (674)


ஆராய்ந்து பார்க்குமிடத்து, செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டுவைத்த குறை, அவிக்காது விட்டுவைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டு வைத்த வரை அழித்துவிடும்.

பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)


போர் செய்யுமுன் பொருள், கருவி, காலம், செயல், இடம் என்னும் ஐவகையிலும் தனக்கும் தன் பகைவர்க்கும் உள்ள நிலைமைகளை மயக்கமற எண்ணி, தன்வலி மிக்கிருப்பின் அதன்பின் போர் செய்க.

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)


வினை முடித்தற்கு வேண்டிய முயற்சியும் அதற்குத் தடையாக இடையில் வரும் துன்பங்களும் தடை நீங்கி வினை வெற்றியாக முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும் ஆராய்ந்து பார்த்து வினைசெய்க.

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)


மேற்கூறியவாறு செய்யப்பட்ட வேண்டிய வினையைச் செய்யுமாறு மேற் கொண்டவன் செய்ய வேண்டிய முறையாவது அவ் வினையை ஏற்க னவே செய்து அதன் உள் மருமங்களை அறிந்தவனது கருத்தை அறிந்து அதன்படி செய்தலாம்.

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (678)


ஒரு வினையைச் செய்யும்பொழுதே அதனால் வேறும் ஒரு வினையை முடித்துக் கொள்ளுதல் மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானை யால் வேறும் ஒரு யானையைப் பிடித்துக் காட்டிய தொக்கும்.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679)


வினை தொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாவரைத் தனக்கு நட் பாக்கிக் கொள்ளுதல், தன் நண்பருக்கு இனியன செய்தலினும் விரைந்து செய்யப்பட வேண்டியதே.

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680)


சிறிய ஆள்நிலத்தை உடைய அமைச்சர் வலிய பகைவர் வந்து தம்மைத் தாக்கிய விடத்துத் தம்நாட்டிலுள்ள குடிகள் நடுங்குவது கண்டு அஞ்சிப் பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்க்குமாயின் அவ்வலிய பகைவர்க்குத் தாழ்ந்து அவர் கூறுங் கட்டுத் திட்டங்களை ஏற்றுக் கொள்வர்.

No comments:

Post a Comment