Friday, December 27, 2019

8. அன்புடைமை

8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (71)


ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்ட விடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவர் உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாரும் அறியப் பறை சாற்றி விடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)


அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர். அன்புடையாரோ பிறிதின் கிழமைப் பொருள்களை மட்டுமின்றித் தற் கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. (73)


பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்பொடு பொருந்திய தொடர்பை அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடை யோர்.

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. (74)


உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும். அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும்.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. (75)


இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை, அவர் முன்பு இங்கு அன்போடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)


அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர். அவர் அறியார். அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை யறம். (77)


அறத் தெய்வம் அன்பில்லாத உயிரை, எலும்பில்லாத உடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)


உள்ளத்தில் அன்பில்லாத உயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல், பாலை நிலத்தின்கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)


இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, மற்றப் புறத்து நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)


அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச சொல்லப் பெறுவது. அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

No comments:

Post a Comment