Thursday, December 26, 2019

111. புணர்ச்சி மகிழ்தல்

111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட் டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. (1101)


கண்ணாற் கண்டும் காதாற் கேட்டும் நாவாற் சுவைத்தும் மூக்கால் முகர்ந்தும் உடம்பால் தீண்டியும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களும் இவ்வொளி பொருந்திய வளையலை அணிந்தாளிடத்தேயே ஒருங்கு அமைந்திருக்கின்றன.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. (1102
)

ஊதை(வாதம்) முதலிய நோய்கட்கு மருந்தாவன, பெரும்பாலும் அவற் றிற்கு மாறான இயல்புள்ள பிற பொருள்களாம். ஆனால், இவ்வழகிய கலன்களை அணிந்தவளோ, தன்னால் உண்டான நோய்க்கு மருந்து தானே ஆயினாள். இஃதொரு வியப்பே!

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு? (1103)


நீ மிகச் சிறந்ததாக உயர்த்திக் கூறும் செங்கண்மாலின் வீட்டுலகம் ஐம்புல இன்பம் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில்போல் இன்பஞ் சிறந்ததோ?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்? (1104)


தன்னைவிட்டு அகன்றாற் சுடுவதும் தனக்கு நெருங்கினாற் குளிர்வது மான புதுமைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். (1105)


அழகிய இதழுள்ள பூவை அணிந்த கூந்தலியாகிய இவள் தோள்கள் விரும்பிய போதெல்லாம் ஆசைப்பட்ட அரும்பொருள்கள் தாமே வந்து சேர்ந்து இன்பஞ் செய்தாற்போல நான் வேண்டிய போதெல்லாம் எனக்கு எளிதாகக் கிடைத்து இன்பஞ் செய்தன.

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்(கு)
அமிழ்தின் இயன்றன தோள். (1106)


நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டு தலால் இவ்விளம் பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தினால் அமைக்கப் பெற்றனவாய் இருக்கின்றன.

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (1107)


அழகிய மாநிறத்தையுடைய இப்பெண்ணின் தழுவல் தமக்குரிய தனி மனையிற் குடியிருந்து, தம் முயற்சியாற் பெற்ற பொருளைத் தென்புலத் தார் தெய்வம் விருந்து ஒக்கல் அரசுகட்குப் பகுத்து, எஞ்சியதைத் தாம் உண்டாற் போல்வதே.

வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. (1108)


ஓர் உடம்பு என்னுமாறு இறுக ஒன்றியமையால் காற்றால் இடையறுக் கப்படாத தழுவல், ஒருவரை யயாருவர் விழையும் இருவர்க்கும் இன்பந் தருவதே.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். (1109)


பழகப் பழகப் பாலும் புளித்தல் போல நாளடைவில் இன்பங் குன்றிய புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டியதான ஊடலும், அது முதிர்ந்து உள்ளதையுங் கெடுக்காவாறு அளவறிந்து நீக்கலும், அதன்பின் கூடலும், ஆகிய இவையன்றோ வரைந்து கொண்டு காமவின்பஞ் சிறந்தவர் பெற்ற பயன்கள்.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)


இச்செம்மையான அணிகலன்களை உடையாளொடு கூடுந்தோறும் நான் பெறுங் காமவின்பம் நூல்களாலும் நுண்மதியாலும் பொருள்களை அறிய வறிய முன்னை அறியாமை விளங்கித் தோன்றினாற் போலத் தோன்று கின்றது.

No comments:

Post a Comment