127. அவர்வயின் விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (1261)
அவர் எம்மைவிட்டுப் பிரிந்துபோன நாட்களைச் சுவரிற் குறித்த குறி களைத் தொட்டுத் தொட்டு எண்ணுதலால், என் விரல்கள் தேய்ந்து போயின. அதுவுமின்றி என் கண்களும் அவர்வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து பூத்துப் போயின. இவ்வாறாயும் இன்னும் அவர் வரக்காணேன்.
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. (1262)
விளங்குகின்ற அணிகளை அணிந்த தோழியே! காதலரை இன்று மறப் பேனாயின் என் அழகு நீங்கி, என் தோள்களின் மேலுள்ள கடகங்கள் கழன்று விடும்.
உரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன். (1263)
இன்ப நுகர்ச்சியை விரும்பாது வலிமையாற் பெறும் போர் வெற்றியை விரும்பி, நம்மைத் துணையாகக் கொள்வதை இகழ்ந்து ஊக்கத்தை துணையாகக் கொண்டு போனவர் திரும்பி வருதலை விரும்புதலால் இன்றும் உயிர் வாழ்ந்திருக் கின்றேன்.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொடு ஏறுமென் நெஞ்சு. (1264)
காமம் நீங்கியவராய் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நம் காதலர் காமங்கூடியவராய் நம்மிடம் திரும்பி வருதலை நினைந்து என் உள்ளம் வருத்தம் நீங்கி மேன்மேற் பணைத்து எழுகின்றது.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு. (1265)
என் கண்கள் நிறைவுபெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக. அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கிவிடும்.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாங் கெட. (1266)
நீண்டநாளாக வராத என் காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவா ராக. வந்தால், எனக்குத் துன்பஞ் செய்கின்ற இக்காம நோய் அடியோடு நீங்குமாறு அவர் உடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசை தீரப் பருகி இன்புறுவேன்.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்? (1267)
என் கண்போற் சிறந்த காதலர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை பற்றி ஊடுவேனோ அல்லது, என் ஆற்றாமைபற்றி அவரைத் தழுவு வேனோ அல்லது அவ்விரண்டும் வேண்டுதலால் இரு செயல்களையும் விரவுவேனோ இம்மூன்றுள் எது செய்யக் கடவேன்?.
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. (1268)
நம் வேந்தன் முனைந்து போர் புரிந்து வெல்வானாக. யாமும் ஊர் சென்று மனைவியயாடுகூடி அற்றை மாலைப் பொழுதின்கண் விருந்துண்டு மகிழ்வேம்.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)
நெடுந்தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட்கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும்.
பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். (1270)
காதலி நம் பிரிவை ஆற்றாது உள்ளம் உடைந்து இறந்து பட்டபின் நம்மைத் தப்பாது பெறக்கூடிய நிலைமையள் ஆனால்தான் என்ன பயன்? அதற்குமேல், உண்மையில் நம்மைப் பெற்றாலுந்தான் என்ன பயன்? இனி, அதற்கும் மேல், நம்மொடு உடம்பு ஒன்றிக் கலந்தாலுந்தான் என்ன பயன்? இவை ஒன்றாலும் ஒரு பயனும் இல்லையே!
No comments:
Post a Comment