Thursday, December 26, 2019

50. இடனறிதல்

50. இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது. (491)


பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடம் பெற்ற பின்னல்லது அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க; அவரைச் சிறியர் என்று இகழா திருக்க.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். (492)


மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் அரணைச் சேர்ந்ததனால் உண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (493)


தக்க இடத்தைத் தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு, பகைவரொடு போர்வினை செய்வராயின், வலிமை இல்லாதவரும் வலிமையார் ஆகி வெல்வர்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)


தாம் வினைசெய்வதற்கு ஏற்ற அரணான இடத்தை அறிந்து அங்குச் சென்று தங்கிய அரசர் அவ்விடத்தொடு பொருந்தி நின்று வினை செய்வாராயின் அவரை முன்பு வெல்ல எண்ணியிருந்த பகைவர் அவ் வெண்ணத்தையும் இழப்பர்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495)


முதலை தன் வாழிடமாகிய ஆழநீர் நிலையுள் யானையுட்படப் பிற உயிரிகளை யயல்லாம் வென்று விடும். அந்நீர் நிலையினின்று நீங்கின் அதனின் வலிகுன்றிய உயிரிகளும் அதனை வென்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. (496)


நிலத்தின்கண் ஓடும் வலிய சக்கரங்கள் உள்ள நெடுந்தோர்கள் கடலின் கண் ஓட மாட்டா. கடலின்கண் ஓடும் மரக்கலங்களும் நிலத்தின்கண் ஓடாமாட்டா.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின். (497)


அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யயல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தந் செய்வாராயின் வெல்வ தற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற் போதும், வேறு துணை வேண்டிய தில்லை.

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். (498)


சிறுபடை அரசன் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின், அவனை வெல்லக் கருதிச் சென்று பெரும்படை அரசன் அவனை வெல்லும் வழியின்மை யால் தன் ஊக்கங் கெட்டு வினை யயாழிந்து திரும்புவான்.

சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்டல் அரிது. (499)


அழித்தற்கு அரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளும் ஆகிய பிற பெருமையும் இல்லாதவர் ஆயினும், போர் வினைக்குச் சிறந்த மாந்தரை, அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம்.

காலாழ் களிரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. (500)


பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன் மறவரைக் கோட்டாற் குத்திக் கோத்த மதயானைகளையும், அவை கால் அமிழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட இடத்து மிகச்சிறிய நரிகளும் அவற்றைக் கொன்று விடும்.

No comments:

Post a Comment