Thursday, December 26, 2019

52. தெரிந்து வினையாடல்

52. தெரிந்து வினையாடல்

நன்மையுந் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். (511)


அரசன் முதற்கண் தனக்கிட்ட பணியில், அரசனுக்கு நல்லனவும் தீயனவும் ஆனவற்றை ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பு டைய யான பின் அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச் சிறந்த வினை களில் ஆளப் படுவான்.

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை. (512)


பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து அவற்றாற் செல்வத்தை வளர்த்து, அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்க வல்லவனே அரசனுக்குத் தலைமை அமைச்சனாக பணியாற்றுக.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. (513)


அரசனிடத்து அன்பும் அரசனுக்கு ஆவனவற்றையும் வினைக்கு வேண்டி யவற்றையும் அறியும் அறிவும், வினைசெய்தற்கண் கலங்காமையும், பொருள் கைசேர்ந்த வழியும் தீயவழியாற் பொருள் வருமிடத்தும் அதன் மேல் ஆசை யின்மையும் ஆகிய இந்நாற்குணங்களையும் உறுதியாக உடையவன் மேலதே அரசன் வினையை விட்டிருக்குந் தெளிவாம்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். (514)


எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும், அவ்வினையின் தன்மையால் தம்மை வேறுபாடு மாந்தர் உலகத்துப் பல ராவர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று. (515)


எவ்வினையுந்தான் செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறு களாலும் வருந்தன்பங்களைப் பொறுத்தச் செய்து முடிக்க வல்லானை யல்லது, இவன் நம்மிடத்துச் சிறந்த அன்புடையவன் என்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ(டு)
எய்த உணர்ந்து செயல். (516)


செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து, பின்பு அவனாற் செய்யப் படும் செயலின் தன்மையை ஆராய்ந்து, அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமாறு அறிந்து,அவை பொருந்து மாயின், அவனை அவ் வினையின்கண் அரசன் ஆளு தலைச் செய்க.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல். (517)


இவ்வினையை இருக்கருவி கொண்டு இவ்வாற்றல் உள்ள இவன் செய்து முடிப்பான் என்று கூறுபடுத்தி ஆராய்ந்து மூன்றும் பொருந்திய விடத்து அவ் வினையை அக்கருவியும் அவ்வாற்றலும் உள்ள அவனிடம் ஒப்படைக்க.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். (518)


அரசன் ஒருவனை ஒரு வினை செய்வதற்கு உரியவனாக ஆராய்ந்து துணிந்த பின்; அவனை அவ்வினைக்கு முழு உரிமையும் உடையவனாகச் செய்க.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு. (519)


தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரம் முழு முயற்சியுடன் செய்து வருபவன் அவ்வுரிமை பற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவ தைப் பொறாமைக் காரர் கோட்சொல்லைக் கேட்டு அரசன் வேறுபடக் கருதுவானாயின், திருமகள் அவனை விட்டு நீங்குவாள்.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. (520)


அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ஆதலால், அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க.

No comments:

Post a Comment