Thursday, December 26, 2019

110. குறிப்பறிதல்

110. குறிப்பறிதல்

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (1091)


இவளுடைய மையூட்டிய கண்கள் என் மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது.

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. (1092)


இவள் கண்கள் எனக்குத் தெரியாமல் என்னை மறைவாகப் பார்க்கும் இடுகிய பார்வை மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதியன்று, அதற்கு மேற் பட்டதாம்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். (1093)


நான் நோக்காதபோது அவள் என்னை அன்புடன் நோக்கினாள். அங்ஙனம் நோக்கினவள் உடனே ஒன்றைக் கருதி நாணங் கொண்டு என்னை வணங்குவாள் போலத் தலைகுனிந்தாள். அச்செயல் எம் இருவேமையும் பிணிக்கும் காதற்பயிர் வளர அவள் வார்த்த நீராகும்.

யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும். (1094)


நான் அவளை நோக்கும்போது அவள் எதிர்நோக்காது நாணித் தலை குனிந்து நிலத்தை நோக்குவாள். அதைக் கண்டு நான் அவளை நோக்காத போது அவள் என்னை நோக்கித் தனக்குள் மகிழ்ந்து புன்னகை கொள் வாள்.

குறிக்கொண்டு நோக்காமை யல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். (1095)


என்னை முகநோக்கி உற்றுப்பார்க்காத தன்மையே யன்றி, ஒரு கண்ணைச் சுருக்கிப் பார்த்தாற் போல என்னை நோக்கிப் பின் தனக் குள்ளே மகிழ்வாள்.

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். (1096)


புறத்தில் அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னார் ஆயினும் அகத்திற் பகையில்லாதவர் சொல் பின் பயன்படுதல் குறை வேண்டியவரால் விரைந்து அறியப்படும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (1097)


உண்மையாக வெறுப்புக் கொள்ளாத போலிக் கடுஞ்சொல்லும், அகத்திற் பகையாதிருந்தே புறத்திற் பகைத்தார் போற் பார்க்குஞ் சினப் பார்வையும் அயலார் போல் நடித்து அன்பராய் இருப்பவரிடம் ஒரு கருத்துப் பற்றி நிகழ்வனவாம்.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பகையினள் பைய நகும். (1098)


தோழி என்னைச் சேட்படுத்து உரைக்குஞ் சொற்கு ஆற்றாது யான் இரங்கி நோக்கிய விடத்து, அஃதறிந்து அன்பால் நெகிழ்ந்து மெல்ல நகுவாள். ஆதலால், அசையும் மெல்லியலாள் ஆகிய என் காதலிக்கு அந்நகையின்கண் ஓர் அழகிய குறிப்புளது.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (1099)


முன்னறியாதார் போல ஒருவரை யயாருவர் பொது நோக்கால் நோக்குதல் இவ்விரு காதலரிடத்தேயே உள்ளன.

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. (1100)


காதலர் இருவருள் ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் சிறப்புப் பார்வையால் ஒன்றுபடின் அவர் வாய்மை போற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பொருளும் உடையன வாகா.

No comments:

Post a Comment