122. கனவு நிலை உரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து? (1211)
யான் வருந்துதல் அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டு வந்து காட்டிய கனவிற்கு விருந்தாக நான் எதனைச் செய்வேன்!
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்(கு)
உயலுண்மை சாற்றுவேன் மன். (1212)
தூக்கம் பெறாது வருந்துகின்ற என் கயல்மீன் போலும் மையுண்ட கண் கள் யான் வேண்டிக்கொண்டால் தூங்குமாயின் காதலரைக் கனவிற் கண்டு நான் பிரிவாற்றக் கூடிய தன்மையைத் தெளிவாகவும் வெளிப் படையாகவும் எடுத்துச் சொல்வேன்.
நனவினான் நல்கா தவரைக் கனவினான்
காண்டலின் உண்டென் உயிர். (1213)
நனவின்கண் வந்து கூடி இன்பந் தராதவரை யான் கனவின்கட் கண்ட காட்சியால் என் உயிர் தழைக்கின்றது.
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. (1214)
நனவின்கண் வந்து கூடி இன்பந் தராதவரை இருக்கும் இடந் தேடிச் சென்று தூதர் அழைத்து வரற்கு ஏதுவான இன்ப நிகழ்ச்சிகள் கனவின் கண் நிகழ்கின்றன.
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. (1215)
முன்பு நனவின்கண் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதே இனிதாய் இருந்தது. இன்று கனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்ட பொழுதே இனிதாய் இருந்தது. ஆதலால் இரண்டும் எனக்கு ஒத்தனவே.
நனவென ஒன்றில்லை யாயின் கனவினான்
காதலர் நீங்கலர் மன். (1216)
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின் கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார்.
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது? (1217)
பிரிவுக் காலத்தில் ஒருபோதும் நனவின்கண் வந்து கூடி இன்பந்தராத கொடியவர் கனவின்கண் மட்டும் வந்து நம்மை வருத்துவது ஏன்?
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
செஞ்சத்தர் ஆவர் விரைந்து. (1218)
என் உள்ளத்தில் இடைவிடாது உறைகின்ற காதலர், யான் தூங்கும் பொழுது என் தோள்மேல் அமர்ந்திருந்து பின்பு விழிக்கும்போது விரைந்து பழையபடி என் உள்ளத்திற் புகுவர்.
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் கணா தவர். (1219)
தமக்கொரு காதலர் இன்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர், நனவின்கண் தாம் அறிய வந்து கூடி இன்பந்தராத நம் காதலரை அன்பிலர் என்று பழித்து நொந்து கொள்வர்.
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
கணார்கொல் இவ்வூ ரவர். (1220)
இவ்வூர் மகளிர் நனவின்கண் நம் காதலர் நம்மைக் கைவிட்டார் என்று கொடுமை கூறுவர்; ஆனால், அவர் கனவின்கண் தப்பாது வருதலை என் போலக் கண்டறியார்.
No comments:
Post a Comment