130. நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயயமக் காகா தது? (1291)
என் உள்ளமே! அவருடைய உள்ளம் நம்மை
நினையாது அவருக்கே உதவுதல் கண்டபின்பும் நீ எமக்கு உதவாது அவரையே நினைத்தற்குத்
கரணியம் யாது?
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியயன் நெஞ்சு. (1292)
என் உள்ளமே! கணவர் இன்று நம்மாட்டு அன்பில்லாதவர் என்று அறிந்த பின்பும் அவரிடஞ் சென்றால் சினவாமற்
சேர்த்துக்கொள்வார் என்று கருதி அவர்பாற் செல்லுகின்றாய். இது போலும் மடமை வேறு
உண்டோ!
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல். (1293)
என் உள்ளமே! என்னிடத்து நில்லாது நீ
விரும்பியவாறே அவரிடஞ் செல் தற்குக் கரணியம், ‘நொடித்தவர்க்கு உறவில்லை’ என்னும் உலக நடப்போ வேறோ?
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294)
கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி
முன்பு ஊடி அதை அளவ றிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதாய். கண்டவுடன் இன்பம்
நுகரக் கருதுகின்றாய். ஆதலால், இனி அத்தகைய செய்திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன்.
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. (1295)
காதலரைக் பெறாதபோது அப்பெறாமைக்கு அஞ்சுகின்றது; பெற்ற போதோ எதிர்காலத்தில் நேரக்கூடிய
பிரிவைக் கருதிக் கொண்டு அதற்கு அஞ்சுகின்றது. இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தை
உடையதாய் இருக்கின்றது.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. (1296)
காதலரைப் பிரிந்திருந்து அவர் செய்த
கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால் என்னைப் பிய்த்துத் தின்பதுபோல் துன்பஞ்
செய்தற்கே என் உள்ளம் என்னொடுகூட இருந்தது.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு. (1297)
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத
என் மாட்சிமை இல்லா மட நெஞ்சின் சேர்க்கையினால் என் உயிரினுஞ் சிறந்த நாணையும்
மறந்து விட்டேன்.
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. (1298)
உயிர்மேல் காதலையுடைய என் உள்ளம், நம்மைப் பொருட்படுத்தாது சென்றார் என்று
நம் கணவரை நாமும் பொருட்படுத்தாது இருப்போ மாயின் பின் நமக்கு இழிவாம் என்று கருதி
அவர் பக்கமே நினைக்கும்.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தம்முடைய
நெஞ்சந் துணையல் வழி. (1299)
ஒருவருக்குத் துன்பம் வந்துவிடத்து அதை
நீக்குதற்குத் தம்முடன் பிறந்து தம் உறுப்பாக இரண்டறக் கலந்திருப்பதும் தமக்கு உதவ
முழுக்கடமைப் பட்டிருப்பது மான உள்ளமே துணையாய் இருந்து உதவாதவிடத்து வேறு
யார்தான் துணையாக வந்து உதவுவார்?
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. (1300)
தம் உறுப்பாக உள்ள உள்ளமே ஒருவருக்கு
உறவு அல்லாத விடத்து அயலார் உறவு அல்லாதவராக இருத்தல் எளிதாகக் காணக் கூடிய
செய்தியே யாகும்.
No comments:
Post a Comment